லண்டன்: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா என உலக நாடுகளை வெறும் 93 ஆயிரத்தில் சுற்றிப் பார்க்கும் வகையில் சூப்பரான ஆஃபர் ஒன்றை வழங்கி இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது இங்கிலாந்தைச் சேர்ந்த பயண நிறுவனம் ஒன்று.
சுற்றுலா செல்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் செல்வதென்றாலே பாக்கெட்டைப் பதம் பார்த்து விடுகிறது பட்ஜெட். அதிலும் குறிப்பாக பயணம் செய்வதற்கான செலவு மட்டுமே ஆயிரக்கணக்கில் ஆகும். இதில், உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்வதென்றால், அது நிச்சயம் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றுதான் நடுத்தரவர்க்கத்தினர் நினைப்பார்கள்.
ஆனால், ஒரு லட்சத்திற்கும் குறைவான பணத்தில் உலக நாடுகளை விமானத்தில் சுற்றிக் காட்டுகிறோம் என வித்தியாசமான ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது இங்கிலாந்து பயண நிறுவனமான டிரையல் பைண்டர்ஸ்.
மிகக் குறைந்த கட்டணம்
இந்தாண்டு நவம்பர் 15ம் தேதி இந்தச் சுற்றுலா ஆரம்பமாக இருக்கிறது. விமான மார்க்கமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆசியா போன்ற நாடுகளை சேர்த்து இந்த சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக 999 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது 93 ஆயிரம் ரூபாய் ஆகும்.
கடைசி தேதி
இந்த ஆஃபர் டிக்கெட்டுகளின் விற்பனை இப்போது ஆரம்பித்து அடுத்த மாதம் 5ம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வழக்கம் போலவே, முந்திக் கொண்டு டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மேற்கூறிய கட்டணம் இரண்டு நபர்கள் பங்கிட்டுக் கொள்ளும் திட்டத்தின் கீழ், தனிநபர் ஒருவருக்கானது என்பதையும் தெளிவாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நெட்டிசன்கள் ஆச்சர்யம்
இவ்வளவு குறைந்த கட்டணத்தில் இப்படி ஒரு சுற்றுலாவா, அதுவும் விமானத்தில் என்பதால், இந்த ஆஃபர் அறிவிப்பு இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. சுற்றுலா விரும்பிகள் ஆர்வத்துடன் இதனைப் பதிவு செய்ய ஆரம்பித்திருப்பதாக, பதிவுகளில் தெரிவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
என்ன காரணம்
விளம்பரத்திற்காக இப்படி ஒரு ஆஃபர் வழங்கப்பட்டிருக்கிறதா இல்லை வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை. ஆனால், இந்த சுற்றுலா திட்டத்தில் எதுவும் உள்குத்து இருக்கிறதா இல்லை நிஜமாகவே இது நல்ல ஆஃபரா என்பது, அதைப் பதிவு செய்தவர்கள் உலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து சொன்னால்தான் தெரியும்.