பொருளாதாரம், இலவசங்கள், மக்கள் நலத் திட்டங்கள் பற்றி தேசிய அளவில் விவாதங்கள் கொளுந்து விட்டு எரிந்து வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தேசிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி இந்த விவாதத்’தீ’க்கு பெட்ரோலாக அமைந்து பற்றி எரியச் செய்தது என்றே கூறலாம். ஆனால் இந்த விவாதத்தீ எங்கு துவங்கியது? யார் இதை பற்ற வைத்தார்கள் என்று தெரியுமா? குஜராத் மாநிலத் தேர்தலில் வலுவான அடித்தளம் அமைக்க டெல்லி முதலமைச்சர் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அள்ளி வீசிய “இலவச வாக்குறுதிகள்” தான் இந்த ஒட்டுமொத்த புயலுக்கும் மூலக் காரணம் ஆகும். அப்படி என்ன சம்பவம் செய்தார்கள்? ஏன் மாநில வாக்குறுதிகள் தேசிய விவாதமானது? பிடிஆர் ஏன் இந்த விவாதத்திற்கு அடியெடுத்து வைத்தார்? அவர் கூறும் மிக நீண்ட விளக்கத்தின் முக்கிய அம்சங்களை இத்தொகுப்பில் விரிவாகக் காணலாம்.
ஆம் ஆத்மி அள்ளி வீசிய அந்த இலவச வாக்குறுதிகள் என்னென்ன?
இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத். 182 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட குஜராத்தில் கடைசியாக நடைபெற்ற 2017 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்க, காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றி மிக வலுவான எதிர்க்கட்சியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. இரு கட்சிகளும் சேர்ந்து 90.5 சதவீத வாக்குகளை வாரிக்குவித்து, உதிரிக் கட்சிகளை தவிடுபொடியாக்கி இருந்தன.
அடுத்த தேர்தலுக்கான நேரம் மெல்ல நெருங்கி வரும் வேளையில், இந்த இரு கட்சிக் கூடாரங்களும் அமைதியை கடைபிடித்து வரும் நிலையில், கடந்த தேர்தலில் வெறும் 0.1 % வாக்குகளை பெற்ற சரியாக சொல்வதென்றால் 24,918 வாக்குகளை மட்டும் மாநிலம் முழுவதும் பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆரவாரத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது. தாங்கள் குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.மேலும் இது இலவசம் இல்லை மகளிர்களுக்கான உரிமை தொகை என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். திமுக சொன்னதே! அதே உரிமைத்தொகை! அதே ஆயிரம் ரூபாய் வாக்குறுதி! அடுத்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர சிறப்பு திட்டமும் கொண்டுவரப்படும் என்றும் கெஜ்ரிவால் அறிவித்தார்.
வழக்கமான வாக்குறுதிகள் ஏன் தேசிய விவாதமானது?
இலவச அறிவிப்புகளை கெஜ்ரிவால் அறிவித்து கொண்டிருக்க, மறுபுறம் முதல் எதிர்வினை பிரதமர் மோடியிடம் இருந்து வந்தது. ஹரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தடையாக இருக்கும் என்றும் வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். அவ்வளவுதான்! பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கினர்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோடீஸ்வரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, ஏழைகள் மீது வரிச்சுமையை ஏற்றுவதாக கடுமையாக சாடியிருந்தார். இலவசங்களை ஒழிப்போம் என்பது சாமானிய மக்களுக்கு எதிரான அறிவிப்பு என்றும், இலவச கல்வி, மருத்துவ வசதியை அடிப்படை உரிமையாக கருத வேண்டுமே தவிர இலவச அறிவிப்பாகக் கருதக் கூடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரவிந்த் கெஜ்ரிவால் ஏழை, எளிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, மோடியின் நண்பர்களுக்கு கோடிக்கணக்காக மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை பாஜகவினர் கொச்சைப்படுத்துவதாகவும் கூறினார்.
மாறி மாறி நடைபெற்ற இந்த கருத்துப் போர், தேசிய ஊடகங்களில் விவாதமாக மாறியது. அதே வேளையில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் சமயங்களில் கட்சிகள் அளிக்கும் இலவச அறிவிப்புகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. “இலவசங்கள் தொடர வேண்டுமா வேண்டாமா என்று நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுங்கள்” என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது.
பிடிஆர் எப்படி விவாதப் பொருளானார்?
இந்த நிகழ்வுகள் தொடர்பாக தேசிய ஊடகங்கள் நடத்திய விவாதத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “மக்களால் தேர்வு செய்யப்பட்டு, அரசியல் அமைப்பின் கீழ் இயங்கும் எந்த அரசுகளுக்கும், மாநில நிதியை எதில் செலவு செய்ய வேண்டும் என முடிவு செய்ய உரிமை உள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் விசாரிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை. உங்களிடம் (பாஜக ஆளும் மாநிலங்கள்) நல்ல செயல்திறனுக்கான வரலாறு இருந்தாலோ, நாட்டின் பொருளாதாரத்தைச் சிறப்பாக வளர்த்த வரலாறு இருந்தாலோ அல்லது கடனை குறைத்து, தனிநபர் வருவாயை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளீர்கள் என்றாலோ.. நீங்கள் சொல்லவதை நாங்கள் நிச்சயம் கேட்போம்.
மேலும் இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் நிதிப்பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்துக்கான விகிதம் குறைவு, கல்லூரிச் சேர்க்கை போன்ற மனிதவள குறியீட்டுகளிலும் கூட தமிழ்நாடு உயர்ந்த இடத்தில் இருக்கிறது. இவற்றில் எதுவுமே உங்களிடம் இல்லை என்றால் நாங்கள் ஏன் யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்க வேண்டும்? அதைக் கடவுள் ஆணை போல ஏற்க வேண்டும்? முதலமைச்சர் எனக்கு ஒரு பொறுப்பை வழங்கியிருக்கிறார். அதை நான் சரியாக செய்து வருகிறேன். ஒன்றிய அரசை விட மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். அடுத்த மூன்று ஆண்டும் இதேபோல் சிறப்பாகச் செயல்படுவோம்” என்று தெரிவித்தார். சரவெடியாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2 நிமிடங்கள் பேசிய அந்த குறிப்பிட்ட காணொளி வைரலாக பகிரப்பட்டு கெஜ்ரிவால் Vs மோடி என்ற தொனியில் முன்னெடுக்கப்பட்ட விவாத அடிநாடியை மாநில அரசு Vs மத்திய அரசு என்ற தொனிக்கு மாற்றி அமைத்தது. இதையடுத்து சில நீண்ட நேர்காணல்களில் பேசிய பிடிஆர், மாநில அரசு Vs மத்திய அரசு என்று விவாதிக்க வேண்டிய தேவை இருப்பதாக முன்வைத்த கருத்துகளின் முக்கியமான ஐந்து அம்சங்களை தற்போது பார்க்கலாம்.
பிடிஆர் முன்வைக்கும் விவாதத்தின் 5 முக்கிய அம்சங்கள்.
பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பிடிஆர் அளித்த நேர்காணலுக்கு அவர்கள் வைத்த தலைப்பே, தேசிய விவாதத்தில் தடம் எப்படி மாறியிருக்கிறது என்பதை உணரலாம். “இந்தியா என்பது ஓர் அதிசயம்! ஆனால் அந்த அதிசயம் தற்போது அச்சுறுத்தலில் உள்ளது” என்பதே அந்த தலைப்பு! இந்த நேர்காணல்களில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த கருத்துகளின் முக்கியமான ஐந்து அம்சங்களை தற்போது பார்க்கலாம்.
1. மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்!
“நூற்றாண்டுக்கு மேலான சுயமரியாதை பாரம்பரியத்தை கொண்ட மண் தமிழ்நாடு. ஆதிக்கம் என்பது லண்டனில் இருந்தோ அல்லது டெல்லியில் இருந்தோ எங்கிருந்து வந்தாலும் துணிச்சலுடன் எதிர்த்து நிற்க பழகியிருக்கிறோம். அது எங்கள் ரத்தத்தில் இயல்பாகவே வந்துவிட்டது. எல்லா விஷயங்களிலும் பன்மைத்தன்மையை புறக்கணித்து தாங்கள் விரும்பும் ‘ஒற்றை’ தன்மையை கொண்டுவர, திணிக்க சிலர் முயல்கின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இது முழுக்க எதிரானது. மாநில உரிமைகள் பற்றி சில வரிகள் பேசத்துவங்கும் முன் நாட்டுக்கே எதிரானவர்களாக, தேச விரோதிகளாக சித்தரிக்க பார்க்கின்றனர். அதற்காகவெல்லாம் பேரறிஞர் அண்ணா வழி வந்த நாங்கள் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றார் பிடிஆர்.
2. முதல்வர் மோடி கூட மாநில உரிமைக்கு குரல்கொடுத்தார்:
“நமது அரசியலமைப்பில் கூட்டாட்சி என்றும் மாநிலங்களின் ஒன்றியம் என்றும் குறிப்பிட்டுள்ள போதும் உண்மையில் இங்கு கூட்டாட்சி என்பது வார்த்தையில் கூட இல்லை என்றே சொல்லலாம். முதலாளித்துவத்தை பின்பற்றும் அமெரிக்காவிலும் சரி, கம்யூனிசத்தை பின்பற்றும் சீனாவிலும் சரி, அந்தத்த மாநிலங்களுக்கு தனி சட்டங்கள், தனி வரி விதிப்புகள், தனி செலவினங்களைத்தான் மேற்கொள்கிறார்கள். மைய அரசு அங்கு மாநில உரிமையில் ஒரு விஷயத்தில் கூட தலையிட முடியாது. அது பற்றி நினைக்கக் கூட முடியாது. ஆனால் இந்தியா முழுக்க முழுக்க மத்திய அரசின் ஆளுகைக்கு கீழ் இயங்கும் வண்ணம் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகளுக்காக அண்ணா பேசினார் என்பது மட்டுமல்ல, கடந்த 20 வருடங்களில் தனது மாநில உரிமைகளுக்காக மிக திடமாக ஒருவர் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். மத்திய அரசின் எதேச்சதிகார போக்கை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அது வேறு யாருமல்ல. தற்போதைய பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கடுமையாக மத்திய அரசை விமர்சித்திருந்தார். நான் பேசுகிற விஷயமெல்லாம் அவரை விட மிகவும் மென்மையான கருத்துகள்தான். அவ்வளவு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் மோடி. மாநில உரிமைகள் பேசுவது தமிழர்களுக்கோ அல்லது திராவிடர்களுக்கோ சொந்தமல்ல. ஆதிக்கத்துக்கு உள்ளாகும் மாநிலங்களுக்கானது” என்றார் பிடிஆர்.
3. கூட்டாட்சியை குழிதோண்டி புதைக்கிறார்கள்!
“பிரதமர் மோடியின் உரைகளில் கூட்டாட்சி குறித்த கருத்துகள் இடம்பெறுகின்றன. ஆனால் அவரது அரசின் செயல்பாடுகள் அதற்கு முரண்பாடாகத்தான் இருக்கின்றன. ஜிஎஸ்டி, மாநிலப்பட்டியல், மாநிலக் கொள்கைகள், கல்வி ஆகியவற்றில் மாநில உரிமைகளில் மத்திய அரசு எதேச்சதிகாரப் போக்குடன் நடந்து கொள்கின்றது. மாநிலப்பட்டியலில் இருக்கும் விவசாயத்திற்கு 3 சட்டங்களை அவசர கதியில் நிறைவேற்றி, கடும் எதிர்ப்பு கிளம்பியபின் மத்திய அரசு திரும்பப் பெற்றது. மாநில உரிமைகள் பறிபோகும்போது, தங்கள் வரம்பை மீறி மத்திய அரசு நடந்து கொள்ளும்போது சுயமரியாதை உள்ள கூட்டம் அதை எதிர்த்து குரல் கொடுக்கும்” என்றார் பிடிஆர்.
4. வளர்ச்சி இடைவெளியில் கவனம் செலுத்துங்கள்!
“தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்கள், மத்திய அரசுக்கும் வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கும் தொடர்ச்சியாக தங்கள் நிதியை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த நிதிப் பகிர்வு உண்மையிலேயே அந்த மாநிலங்களுக்கு உதவுபுரிகிறதா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. இரு தரப்புக்குமான வளர்ச்சி இடைவெளி தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. வளர்ந்த மாநிலங்களின் பிறப்பு விகிதம், தனிநபர் வருமானம் உள்ளிட்ட தரவுகள் ஹிந்தி பெல்ட் என்று கூறப்படும் வளராத மாநிலங்களுக்கு முழு முரண் நிலையில் இருக்கின்றன. தேசத்தலைவர்கள் இந்த அதிகரிக்கும் வளர்ச்சி இடைவெளியை பற்றி சிந்திக்க வேண்டும். அதை சரிசெய்ய வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஒற்றை கொள்கைகளைத் திணிப்பது பற்றி அல்ல” என்றார் பிடிஆர்.
5. இந்தியா எனும் அதிசயம் தற்போது ஆபத்தில்!
“1.3 பில்லியம் மக்கள் வாழும் தேசம் இது. எங்கு பார்த்தாலும் முரண்கள், வேற்றுமைகளை மட்டுமே நாம் பார்க்க இயலும். அதனால் தான் நான் இவ்வாறு சொல்கிறேன். இந்தியா என்பது ஓர் அதிசயம்! ஆனால் அந்த அதிசயம் தற்போது அச்சுறுத்தலில் உள்ளது. இந்த அதிசயம் இப்படியே தொடருமா என்பதில் எனக்கு சந்தேகமும் அச்சமும் எழுந்திருக்கிறது. சில வெற்றிகளைப் பார்த்த பின் தங்களை கடவுளாக சிலர் எண்ணி விடுவர். ஆதிக்கம் செலுத்த துவங்கி விடுவர். கொஞ்சம் வரலாற்றை பாருங்கள். அப்படிச் செய்தவர்கள் எல்லாம் எப்படி வீழ்ந்தார்கள் என்று! மனித இயல்பு மீது நம்பிக்கை வைத்து சொல்கிறேன். தங்களுக்கு வரும் ஆபத்தை எப்படி வீழ்த்துவது என்றும் அதற்கான வழியை கண்டுபிடிப்பதையும் மக்கள் சரியாக மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன். எல்லாம் ஒரு சுழற்சிதான். இந்தியாவும் இந்த ஆபத்தில் இருந்து மீண்டு வரும்” என்றார் பிடிஆர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM