திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் ஆளில்லாத வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர்த் தொட்டிக்குள்ள விழுந்து காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.
அதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “இளம் மாக்னா யானை ஒன்று காட்டை ஒட்டிய பகுதியில் இருக்கும் வீட்டின் சோலார் மின்வேலியை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளது. பின்னர் அந்த யானை அங்கிருந்த கழிவுநீர்த் தொட்டிக்குள் தலை வெளியே தெரியும் படியாக உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துயரச் சம்பவம் வெள்ளிகுளங்கரா வனரசரகத்திற்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.
கழிவுநீர்த் தொட்டியில் இருந்து ‘க்ரேன்’ உதவியுடன் மேலே தூக்கப்பட்ட யானை உடற்கூராய்வுக்கு பின்னர் புதைக்கப்படும் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.