வீரன் வேலுத் தம்பியாக நடிக்கும் கணேஷ் வெங்கட்ராம்

இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், கான்டிலோ பிக்சர்ஸ் மற்றும் டிடி நேஷனல் ஆகியவை இந்தியாவில் அதிகம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை ஸ்வராஜ் என்ற தலைப்பில் தொலைக்காட்சி தொடராக தயாரித்து அதனை பொதிகை சேனலில் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. விரைவில் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம் போன்ற அனைத்து மொழிகளிலும் பிரபலமான ஓடிடி தளத்திலும் பார்க்கலாம். இதில் 75 சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை இடம் பெறுகிறது. அவற்றில் ஒன்றாக தமிழகம் மற்றும் கேரளாவில் புகழ்பெற்ற வீரன் வேலுத் தம்பியின் வாழ்க்கையும் இடம் பெறுகிறது.

இதில் வேலுத் தம்பியாக கணேஷ் வெங்கட்ராம் நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒரு நடிகராக, இந்திய வரலாற்றில் இருந்து ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. ஒரு துணிச்சலான இதயம், ஒரு போர்வீரன் என்று நடித்த அனுபவம் உண்மையிலேயே நிறைவாக இருந்தது. வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்கவும், தங்களைப் பரிசோதித்து கொள்ளவும், வெவ்வேறு மொழிகளில் பணியாற்றவும் விரும்பும் என்னைப் போன்ற நடிகர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம். நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் சொல்லப்படாத வீரம் பற்றிய பல கதைகள் உள்ளன. அதை இளம் தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். என்றார்.

வேலாயுதன் செண்பகராமன் தம்பி என்ற வேலுத்தம்பி கி.பி.1765ம் ஆண்டு அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நாஞ்சில் நாட்டில் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) தலக்குளம் என்ற கிராமத்தில் பிறந்தார். இளம்வயதிலேயே களரி கலை திறமை கொண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் எவரும் வெல்ல முடியாத வீரனாக இருந்தார். வேலுத்தம்பியின் திறமையை கண்டு வியந்த மன்னர் தர்மராஜா கி.பி.1784ம் ஆண்டு வேலுத்தம்பியை மாவேலிக்கர எனும் இடத்தில் வரி வசூலிக்கும் அரசு காரியக்காராய் நியமித்தார்.

ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தை எதிர்தார் வேலுத்தம்பி. வரி கட்ட மறுத்து கலகம் செய்தார். சிறு படை திரட்டி திருவனந்தபுரம் கோட்டையை முற்றுகையிட்டார். அவரது போராட்டத்தின் உண்மையை உணர்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம் அவருக்கு நிதி அமைச்சர் பதவி வழங்கியது. பின்னர் தொடர்ந்து அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், அநீதிகளுக்கு எதிராவும் போராடினார். தனது வீட்டுக்கு குறைவான சொத்து வரி விதித்த அரசு ஊழியரின் கைவிரல்களை வெட்டினார். அதற்கு உதவி செய்த தனது தாயை வீட்டு சிறையில் அடைத்தார் என பல செவி வழி கதைகள் அவரை பற்றி நிறைய இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.