ஆகமங்கள் என்றால் என்ன, கோவில்களில் அவற்றின் முக்கியத்துவம் என்ன?

What the agamam of temples?

Getty Images

What the agamam of temples?

கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும்போது ஆகமங்களின்படி நியமிக்க வேண்டுமென நீதிமன்றங்கள் அவ்வப்போது கூறிவருகின்றன. ஆகமங்கள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விவகாரத்தில் தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள், அர்ச்சகர் நியமனங்கள் ஆகம விதிகளின்படி நடக்க வேண்டுமென தீர்ப்பளிக்கின்றன. உண்மையில் ஆகமங்கள் என்றால் என்ன, அவற்றுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

ஆகமங்கள் என்றால் என்ன?

ஆகமம் என்பதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. ஆகமம் என்பது வடமொழிச் சொல் என்றும் அதற்கு ‘வந்தது’ என்று அர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது. ‘வந்தது’ என்றால் யாரிடமிருந்து வந்தது என்ற கேள்வியெழும் பட்சத்தில், சிவனிடமிருந்து வந்தது என்று சைவர்கள் சொல்கின்றனர். ஆனால், அதனை வைணவர்கள் உள்ளிட்ட பிறர் ஏற்பதில்லை.

கோவில் கட்டுதல், தெய்வங்களின் திருவுருவச் சிலைகளை கோவிலில் வைத்தல், வழிபாடு செய்தல், பரிவார தெய்வங்கள் நிறுவப்படும் முறை, தினசரி பூஜைகள், விசேஷ நாட்களுக்கான பூஜைகள், திருவிழாக்கள் ஆகியவை நடத்தப்பட வேண்டிய முறைகள் குறித்து விரிவாக விளக்கும் நூல்களே ஆகமங்கள் எனப்படுகின்றன.

ஆகமங்கள் எப்போது தோன்றின என்பது குறித்து தெளிவான கருத்துகள் இல்லை. பொதுவாக, இறைவழிபாடு என்பது நிறுவனமயமான பிறகு, அவற்றை முறைப்படுத்த இந்த ஆகமங்கள் தோன்றியிருக்கலாம்.

இந்த நடைமுறை வழக்கத்தை நாம் ஆகமங்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், சிவன் கோவில்களில் பின்பற்றப்படும் வழக்கங்கள் மட்டுமே ஆகமங்கள் என்று குறிப்பிடப்படும்.

வைணவக் கோவில்களின் நடைமுறைகள் வைணவத் தொகுப்புகள் அல்லது வைணவ சம்ஹிதைகள் என்ற பெயரால் அழைக்கப்படும்.

அம்மன் வழிபாடு அல்லது சாக்த வழிபாட்டில், இந்த நடைமுறைகள் தந்திரம் என்று அழைக்கப்படும்.

ஸ்மார்த்தர்களைப் பொறுத்தவரை உருவ வழிபாடு கிடையாது என்பதால், அவர்களுக்கு ஆகமங்கள் கிடையாது. வேதங்களில் சொல்லப்படும் ஹோமங்களை நடத்தும் முறைகள் மட்டுமே உண்டு.

காணாபத்யம் எனப்படும் கணபதியை வழிபடுவதற்கு தனியான, இறுக்கமான வழிபாட்டு நடைமுறைகள் இல்லை. ஆனால், அவர் சிவனுடைய மகனாகக் கருதப்பட்டு சில கோவில்களில் சைவ ஆகமங்களைப் பின்பற்றுவதும் உண்டு.

ஆகவே, வைணவக் கோவில்களிலோ, கணபதி, முருகன், அம்மன் கோவில்களிலோ பின்பற்றப்படுபவை ஆகமங்கள் இல்லையென்றாலும் பொதுவாக அவை அந்தப் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.

இந்த ஆகம நடைமுறை என்பது ஆச்சரியப்படத்தக்க வகையில், தமிழ்நாட்டில் மட்டுமே பொதுவாக பின்பற்றப்படும் நடைமுறையாகும். தமிழ்நாட்டிற்கு வெளியில் திருப்பதி, காளகஸ்தி ஆகிய கோவிகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளன. வட இந்தியாவில் இவை பின்பற்றப்படுவதில்லை. ஆகவே ஆகமங்கள் என்பவை தமிழிலேயே தோன்றியவை என்று சொல்பவர்களும் இருக்கின்றனர்.

சைவ ஆகமங்கள்:

சைவ ஆகமங்களைப் பொறுத்தவரை மொத்தம் 28 ஆகமங்கள் இருக்கின்றன. உப ஆகமங்கள் 207 இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இத்தனை ஆகமங்கள் இருந்தாலும் நடைமுறையில் காரண ஆகமம், காமிய ஆகமம், மகுடஆகமம், வாதுள ஆகமம், சுப்ரபேத ஆகமம் ஆகியவை மட்டுமே கிடைக்கின்றன. இதிலும் காமிய ஆகமமே பெரும்பாலான கோவில்களில் பின்பற்றப்படுகிறது. அதைவிடக் குறைந்த அளவில் காரண ஆகமம் பின்பற்றப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகுட ஆகமம் பின்பற்றப்படுகிறது.

ஆகமங்கள் ஒவ்வொன்றும் நான்கு பகுதிகளைக் கொண்டவை. முதல் பகுதி கோவில் வழிபாட்டின் பொருட்டு செய்யப்படும் கடமைகளைக் கூறுகிறது. இரண்டாம் பகுதி கோவில் கட்டும் முறைகளையும் நித்ய பூஜைகளையும் நைமித்ய பூஜைகளையும் பரிகாரங்களையும் கூறுகிறது. மூன்றாம் பகுதி தியான முறைகளையும் யோக முறைகளையும் கூறுகிறது. நான்காம் பகுதி சமயக் கொள்கைகளையும் முக்தி பெறுவதற்கான வழிகளையும் கூறுகிறது.

இந்த ஆகமங்கள் அனைத்தையும் உபதேசிக்கக் கேட்டவர்கள் கௌசிகர், காசிபர், பரத்வாஜர், கௌதமர், அகஸ்தியர் ஆகிய ஐந்து பேர். அவர்களுக்குப் பிறகு அவர்களது வழித்தோன்றல்கள் அந்தந்தக் கோவில்களில் பூஜை செய்து வருகிறார்கள். அவர்களே தற்போது சிவாச்சாரியார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்பது இவர்களது நம்பிக்கை.

கோவில்கள்

Getty Images

கோவில்கள்

வைணவ சம்ஹிதைகள்:

வைணவ சம்ஹிதைகள் மொத்தமே இரண்டுதான். அவை, வைகானச சம்ஹிதி, பாஞ்சராத்ர சம்ஹிதி. இவற்றுள் வைகானச சம்ஹிதி சற்று இறுக்கமான நடைமுறைகளைக் கொண்டது. நாராயணனுக்கான பூஜை முறைகளை விகனஸ முனிவர் சொன்னதாகவும் அவையே வைகானச சம்ஹிதிகள் என்றும் கருதப்படுகின்றன. இதனை விகனச சூத்தரத்தினர் தவிர பிறருக்கு சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை.

பாஞ்சராத்ர சம்ஹிதிகளைப் பொறுத்தவரை, அவை ஐந்து இரவுகளில் நாராயணனாலேயே அருளப்பட்டவை என்று சொல்லப்படுகிறது. வைகானச சம்ஹிதியோடு ஒப்பிட்டால், இதில் கூறப்படும் நடைமுறைகள் எலிதானவை.

பல வைணவக் கோவில்கள் ஆரம்பத்தில் வைகானச சம்ஹிதைகளின்படி பூஜைகள் நடந்தாலும் பிற்காலத்தில் பாஞ்சராத்ர முறைக்கு அவை மாறிவிட்டன. உதாரணமாக திருவரங்கம், பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் கோவில் ஆகியவை. திருப்பதி, திருவில்லிபுத்தூர், திருவல்லிக்கேணி கோவில்களில் வைகானச சம்ஹிதியே பின்பற்றப்படுகிறது.

கோயில்

Getty Images

கோயில்

சாக்த தந்திரங்கள்:

சாக்த தந்திரங்களைப் பொறுத்தவரை, அவற்றுக்கும் சைவ ஆகமங்களுக்கும் பெரிய வேறுபாடில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், சாக்த தந்திரங்கள் குறித்த விவரங்கள் பெரிதாகக் கிடைக்கவில்லை. தந்திரங்கள் என்பவை கைகளால் செய்யப்படும் அல்லது காட்டப்படும் முத்திரைகள்தான். இவை சிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் நடக்கும் உரையாடலாகச் சொல்லப்படுகின்றன.

தற்போது கிடைக்கும் ஆகமங்களைப் பொறுத்தவை அவை எதுவும் மூல ஆகமங்கள் அல்ல. ஒரே ஆகமத்தின் வேறுவேறு பிரதிகள் வேறுவேறு விதத்தில் உள்ளன என மகராஜன் கமிட்டியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களைப் பொறுத்தவரை நான்கு வகையிலான கோவில்கள் இருக்கின்றன.

1. ஆகம முறைப்படி கட்டப்பட்டு, ஆகம முறைப்படி பூஜை நடக்கும் கோவில்கள்.

2. ஆகம முறைப்படி கட்டப்படாமல் ஆகம முறைப்படி பூஜை நடக்கும் கோவில்கள்.

3. ஆகம முறைப்படி கட்டப்பட்டு, ஆகம முறைப்படி அல்லாமல் பூஜை நடக்கும் கோவில்கள்.

4. ஆகம முறைப்படி கட்டப்படாமல், ஆகம முறைப்படி பூஜை நடக்காத கோவில்கள்.

அர்ச்சகர் நியமனம் குறித்த ஏ.கே. ராஜன் கமிட்டியில் இது தொடர்பாக கணபதி ஸ்தபதியின் கருத்தைப் பெற்றபோது, அவர் ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோவில்கள் எப்படியிருக்க வேண்டுமெனக் கூறுகிறார். “அந்த விதிகளின்படி பார்த்தால் சிதம்பரம் நடராஜர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பிள்ளையார் பட்டி கோவில் ஆகியவை ஆகம விதிப்படி கட்டப்பட்டவை அல்ல.” என்கிறார்.

மேலும், ஒரு ஆகமப்படி கட்டப்பட்ட கோவிலில் வேறு ஆகமங்களைப் பின்பற்றக்கூடாது. ஆனால், காமிக ஆகமப்படி கட்டப்பட்ட மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பூஜைகளிலும் உற்சவ முறைகளிலும் காமிகம் மற்றும் காரணம் ஆகிய இரண்டு ஆகமங்களுமே பின்பற்றப்படுவதாக ஏ.கே. ராஜன் கமிட்டி கூறுகிறது.

அதேபோல, சிவ ஆகமங்களின்படி கட்டப்பட்ட கோவில்களில் சைவம் சாராத வேறு தெய்வங்களின் உருவங்களைப் பிரதிஷ்டை செய்யக்கூடாது. அதேபோல வைணவக் கோவில்களில் வைணவம் சாராத பிற தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்யக்கூடாது. ஒரு கோவிலில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தால் அவை ஆகம முறைப்படி கட்டப்பட்டவை அல்ல. ஆகமங்கள் எதிலும் நவக்கிரகங்களின் வழிபாடு பற்றி குறிப்பிடப்படுவதில்லை.

ஆனால், பல சைவக் கோவில்களில் நவகிரக சன்னிதிகளும் வைணவக் கோவில்களில் விநாயகருக்கு சந்நிதியும் உள்ளன. திருச்செந்தூர் முருகன் கோவிலில் லிங்கம் இல்லாததால், அதனை சைவாகம கோவிலாகக் கருதாமல் குமார தந்திர கோவிலாகக் கருத வேண்டுமென்றும் கணபதி ஸ்தபதி கூறுகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவை அக்காலகட்ட மன்னர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலும் மன்னர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலும் நடந்துள்ளன. அந்தத் தருணங்களில் சமூகத்தில் பெரிய எதிர்ப்பின்றி அவை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்கிறது ஏ.கே. ராஜன் கமிட்டி.

ஆகமங்களின்படி திருமணமாகாதவர்களும் மனைவியை இழந்தவர்களும் பூஜை செய்ய முடியாது. ஆனால், பல கோவில்களில் இந்த விதிகள் மீறப்படுகின்றன. அதேபோல, ஒரு தெய்வத்திற்குரிய மந்திரத்தை மற்றொரு தெய்வத்திற்குச் சொல்லக்கூடாது. இவையும் கோவில்களில் மீறப்படுவதைக் காண முடியும்.

சிவாலயங்களில் பரிசாரகர் பிரிவுக்குரிய சிவாச்சாரியார்கள் மட்டுமே நிவேதனம் தயாரிக்க வேண்டும். ஆனால், தீட்சைகூடப் பெறாத ஸ்மார்த்தர்கள் நிவேதனம் தயாரிப்பதும் நடக்கிறது. அதேபோல, கோவில் மடப்பள்ளியில் தயாரிக்காமல், வீட்டில் சமைத்து எடுத்துவருவதும் நடக்கிறது.

இதைவிட முக்கியமானது, ஒரு கோவில் எந்த ஆகமப்படி கட்டப்பட்டு, கும்பாபிஷேம் நடந்தததோ, அந்த ஆகமப்படியே தொடர்ந்து செயல்பட வேண்டும். ஆனால், பல வைணவ, சைவக் கோவில்களில் இவை மாற்றப்பட்டுள்ளன. திருவரங்கம் கோவில் வைகானச சம்ஹிதைப்படி கட்டப்படு பாஞ்சராத்ர முறைக்கு மாற்றப்பட்டது. பல சைவக் கோவில்கள் காரண முறைப்படி கட்டப்பட்டு, காமிக முறைக்கு மாறியிருக்கின்றன.

கோவிலுக்குரிய நடைமுறைகளின்படி பூஜை செய்யாமல், ஒரு பூசகருக்கு என்ன தெரியுமோ, அதை மட்டும் சொல்லி பூஜை செய்வதும் ஆகமங்களின்படி தவறு. ஆனால், பல கோவில்களில் 108 நாமாவளி மட்டுமே சொல்லப்படுவது இப்போதும் நடக்கிறது.

அதேபோல, எந்த ஆகமத்திலும் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் இணைந்து கோவில்களை வைக்கும் நடைமுறை கிடையாது. ஆனால், சமீப காலங்களில் சிவா – விஷ்ணு கோவில்கள் பெருகி வருகின்றன. இவை எந்த ஆகமங்களின்படி இயங்குகின்றன என்பது கேள்விக்குறிதான்.

மேலும், கோவில்களுக்கு நடை திறக்கும் காலங்களை கடுமையாக பின்பற்ற வேண்டும். ஆனால், கூட்டம் அதிகம் வரும் கோவில்களில் பகல் நேரத்தில் நடை சாற்றப்படுவதே இல்லை. பல கோவில்களில் நள்ளிரவிலும் கோவில்கள் திறந்துவைக்கப்படுகின்றன.

எந்த ஜாதியினர் பூஜைகளைச் செய்யலாம்?

கோயில்

Getty Images

கோயில்

சைவ ஆகமப்படி நடக்கும் கோவில்களில் சிவாச்சாரியார்களே பூஜை செய்யலாம் என்பதே தற்போது வழக்கமாக உள்ளது. சிவாச்சாரியார்கள் என்பவர்கள், இந்த ஆகமங்களை நேரடியாகக் கேட்ட ரிஷிகளின் வழி வந்தவர்களாகக் கூறிக் கொள்பவர்கள். ஆனால், “ஆகமங்களில் எங்குமே சிவாச்சாரியார்கள் மட்டுமே பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லப்படவில்லை. சிவ தீட்சை பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே கட்டாய விதியாக உள்ளது” என்கிறது ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை.

வைணவ சம்பிரதாயத்தைப் பொறுத்தவரை, ஜாதி என்பதே கிடையாது. சங்கு, சக்கரம் தோளில் பொறிக்கப்பெற்றவர்கள் தீவிர வைணவர்கள். பெருமாளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர் பஞ்ச சம்ஸ்காரம் செய்தவராக இருந்தால் உரிய பயிற்சி பெற்று பூஜை செய்யலாம் என்பதே வைணவ சம்பிரதாயம்.

இது தொடர்பாக வேறு சில விஷயங்களையும் ஏ.கே. ராஜன் குழு சுட்டிக்காட்டுகிறது.

1. ஆகமங்களின் எந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் பூஜை செய்ய வேண்டுமெனக் கூறப்படவில்லை.

2. வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்த பலர் ஒரு குறிப்பிட்ட முறைப்படி பல காலம் பூஜை செய்து வந்ததால் அவர்கள் ஒரே இனமாகக் கருதப்பட்டுவிட்டனர். அதற்குக் காரணம் அர்ச்சகர் வேலை என்பது தந்தை – மகன் என வழிவழியாக நியமிக்கப்பட்டு வந்ததுதான்.

3. ஸ்மார்த்த பிரிவினர் இப்போதும் சிவ, வைணவக் கோவில்களில் பூஜை செய்கின்றனர். அது ஆகம மீறல் ஆகாத நிலையில், வேறு ஜாதியினர் பூஜை செய்வதும் ஆகம விதிமீறல் ஆகாது.

4. ஒரு கோவிலில் பூஜை செய்பவர் கோவிலின் நடை திறக்கப்படுவது முதல் இரவில் மூடப்படுவது வரை என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன, என்ன மந்திரங்கள் ஓதப்படுகின்றன என்பதத்தான் தெரிந்திருக்க வேண்டும். இவையே அர்ச்சகராவதற்கான அடிப்படைத் தகுதிகள்.

https://www.youtube.com/watch?v=bhW0N6oLCNY

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.