அதிமுக முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழாவிற்காக மரங்களின் ராட்சத கிளைகள் வெட்டப்பட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
முன்னாள் அமைச்சரும், தற்போது அதிமுக எடப்பாடி அணியின் முக்கிய நிர்வாகியுமான சிவபதி இல்ல திருமணம் வரும் 29 ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்த திருமண விழாவையொட்டி கலையரங்க வளாத்தை திருமண வீட்டார் சுத்தம் செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் அங்குள்ள மரங்களின் கிளைகள் அனைத்தையும் வெட்டி மொட்டையாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் மரங்களை கழிப்பதாகக் கூறி மரத்தின் பக்கவாட்டில் உள்ள பெரிய அளவிலான கிளைகளை இயந்திரங்களின் உதவியுடன் வெட்டிச் சாய்த்தனர்.
இதுகுறித்து கேட்டபோது திருமண நிகழ்ச்சிக்காக மரக் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவதாக பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர் கலையரங்கமும், அந்த வளாகமும் மாவட்ட நலப்பணிகள் குழு சார்பில் நிர்வகிக்கப் படுகிறது. இதன் தலைவராக இருப்பவர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆவார்.
இந்நிலையில் மரங்களின் கிளைகள் வெட்டப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மரங்களை வெட்டக்கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டதுடன், மரங்களை வெட்டும் பணியை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இடத்திலேயே மரக்கிளைகள் கண் இமைக்கும் நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்டது சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM