மும்பை: அமீர்கான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் வெளிநாடுகளில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஹாலிவுட் திரைப்படமான தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் லால் சிங் சத்தா.
இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு படத்தின் கதையை சற்றே மாற்றி அமைத்து வெளியான இந்த படத்திற்கு பாலிவுட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக படு தோல்வியை சந்தித்தது.
பாலிவுட்டில் எதிர்ப்பு
அமீர்கானின் ஹோம் கிரவுண்ட் ஆன பாலிவுட்டிலேயே இந்த முறை லால் சிங் சத்தா படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பிகே படத்தில் இந்து கடவுள்களை அமீர்கான் விமர்சித்தார் என்கிற விஷயத்தை டார்கெட் செய்து பாய்காட் கேங் படத்தை புறக்கணித்தது. லால் சிங் சத்தா படம் வெளியானால் நிலைமை மாறிவிடும் என மிகவும் நம்பிய அமீர்கானுக்கு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அடி விழுந்தது.
படு தோல்வி
அமீர்கானின் முந்தைய படமான தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் முதல் நாளில் வசூலித்த 59 கோடி ரூபாயை வசூலிக்கவே லால் சிங் சத்தா ஒரு வாரம் தடுமாறியது பலரையும் ஷாக் ஆக்கியது. பான் இந்தியா படமாக வெளியான நிலையிலும், இந்தியா முழுவ்தும் படத்துக்கு பெரிய வசூல் இல்லை.
வெளிநாடுகளில் வசூல் வேட்டை
அமீர்கானின் தங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் உள்ளிட்ட படங்கள் சீனாவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தின. அதே போல இந்த படமும் ஓவர்சீஸில் இந்த ஆண்டு வெளியான பாலிவுட் படங்களிலேயே அதிக வசூல் ஈட்டியிருப்பதாக ஆறுதல் ஊட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆலியா பட் படத்தை தாண்டியாச்சு
பாலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியாவடி படம் தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது. அந்த படம் ஓவர்சீஸில் 7.47 மில்லியன் டாலர் வசூல் செய்த நிலையில், அமீர்கானின் லால் சிங் சத்தா 7.5 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது வெளிநாடுகளில் மட்டும் 59 கோடி ரூபாய் வசூலை லால் சிங் சத்தா ஈட்டியுள்ளது.
ஒட்டுமொத்த வசூல்
180 கோடி பட்ஜெட்டில் உருவான லால் சிங் சத்தா திரைப்படம் இந்தியா முழுவதும் இதுவரை 67 கோடி வசூலையும், வெளிநாடுகளில் 59 கோடி வசூல் என ஒட்டுமொத்தமாக 126 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டி உள்ளது. ஓடிடி உரிமம் விற்பனை, ஆடியோ உரிமம் உள்ளிட்டவற்றை சேர்த்தால் போட்ட முதல் வந்து விடும் என்கின்றனர்.