தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்படும் ‘இலவசங்கள்’ தொடர்பான வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துக்கள், பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதே சமயம், அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் இலவசங்கள் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவை பற்றிய விவாதம் தேவை என்றும் தலைமை நீதிபதி கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நிலையை உயர்த்தும் நோக்கத்தில் உள்ள நலத்திட்டங்களை ‘இலவசங்கள்’ என்று அழைக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்திய அரசு வழங்கிய வரிச்சலுகைகள் மற்றும் கடன் தள்ளுபடிகள் “இலவசங்கள்” ஆகுமா என்பதை நீதிமன்றம் ஆராய வேண்டும் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான பி. வில்சன் ஆஜராகி தமது தரப்பு வாதத்தை முன்வைக்க முற்பட்டபோது, தலைமை நீதிபதி என்.வி. ரமணா அவரை நோக்கி, “மிஸ்டர் வில்சன், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி பற்றி நான் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் நான் தலைமை நீதிபதியாக இருப்பதால் என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். ஞானம் என்பது உங்களுக்கோ தனிப்பட்ட கட்சிக்கோ உரியது என்று நான் நினைக்கவில்லை. இந்த விஷயத்தில் எல்லோருக்குமே பொறுப்பு உள்ளது. உங்கள் தரப்பு பேசும் விதம், அறிக்கைகள் கொடுப்பது மற்றும் சொல்வதையெல்லாம் நாங்கள் முற்றாக கவனிக்கவில்லை என்று நினைக்காதீர்கள்,” என்று கூறினார்.
தலைமை நீதிபதியின் இந்த கருத்தை வெளியிட்டதும் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “ஆமாம், தமிழ்நாடு நிதியமைச்சர் உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக டிவியில் பேசியதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். அவை சரியானவை அல்ல” என்றார்.
இதையடுத்து பேசிய நீதிபதி ரமணா, “ஒருவேளை இலவசங்களை மாநிலங்களால் வழங்க முடியாது என்று மத்திய அரசு ஒரு சட்டத்தை இயற்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சட்டம் நீதித்துறை ஆய்வுக்கு உட்படாது என்ற சொல்ல முடியுமா? நாட்டின் நலனுக்காக, இந்த விவகாரத்தை நாங்கள் விசாரிக்கிறோம்,” என்று தெரிவித்தார்.
- “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதன் நிதி ஆதாரம் குறித்தும் விளக்க வேண்டும்”
- உ.பி. தேர்தல்: பாஜக Vs சமாஜ்வாதி கட்சி – தேர்தல் வாக்குறுதிகளில் என்ன வித்தியாசம்?
“உதாரணமாக, சில மாநிலங்கள் ஏழைகளுக்கும் பெண்களுக்கும் சைக்கிள்களை வழங்குகின்றன. சைக்கிள்களை வழங்குவதன் மூலம் வாழ்க்கை முறை மேம்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலவசம் எது, ஒரு நபரின் முன்னேற்றத்திற்கு எது பயன் தருகிறது என்பதுதான் பிரச்னை. கிராமப்புறத்தில் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஒருவருக்கு, அவரது வாழ்வாதாரம் என்பது அவரிடம் இருக்கும் சிறிய படகு அல்லது சைக்கிளையோ சார்ந்ததாக இருக்கலாம். இதைப்பற்றி இங்கு அமர்ந்து கொண்டு விவாதிக்க முடியாது.”
மேலும், “இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது அதன் உரிமை. தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட இலவசங்கள் குறித்து விரிவாக விவாதிக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்,” என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இந்த வழக்கு உண்மையில் என்ன?
- தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதை தடுக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞரும் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளருமான அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதி ஹிமா கோலி, நீதிபதி சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
- ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், திமுக, ஒய்எஸ்ஆர்சிபி போன்ற அரசியல் கட்சிகள் இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்த்துக் கொண்டு நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காக அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை “இலவசங்கள்” என்று கருதக் கூடாது என்று ஒற்றை குரலில் மனு தாக்கல் செய்தன.
- இந்த வழக்கின் முந்தைய விசாரணைகளின் போது, ”இலவசங்கள்” மூலம் அரசு கருவூலத்துக்கு ஏற்பட்ட சுமை குறித்து கவலை தெரிவித்த நீதிமன்றம், நலத்திட்ட நடவடிக்கைகளுக்கும் பொது பொருளாதாரத்துக்கும் இடையே சமநிலையை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
- இந்த வழக்கு விசாரணையின்போது இந்திய தேர்தல் ஆணையம், இந்திய நிதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி, மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கிய நிபுணர் குழுவின் பிரதிநிதிகளைக் கொண்டு ஒரு நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் யோசனை கூறியது.
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞருமம் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபலின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. அதன்படி, அவர் “இந்த விவகாரத்தை நிதி ஆணையத்தின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். பிரச்னை விவாதிக்கப்படும்போது, அதை எப்படி சமாளிப்பது என்பதுதான் என் கேள்வி. அரசியல் சார்பற்ற ஒரு அமைப்பால் மட்டுமே அதை சமாளிக்க முடியும். அந்த அமைப்புதான் நிதி ஆணையம்” என்றார்.
இதையடுத்து தமது தரப்பு விளக்கத்தையும் கபில் சிபல் வழங்கினார். “நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி பொறுப்புணர்வு மேலாண்மை சட்டத்தில், 3 சதவீதத்துக்கு மேல் ‘பற்றாக்குறை’ என்பது இருக்க முடியாது. இலவசங்கள் இருந்தால் அது பற்றாக்குறையை 3 சதவீதத்திற்கு மேல் ஆக்கும். மாநிலத்தின் நிதிப் பிரிவு நிதி ஒதுக்கீடு பிரச்னையை கவனிக்கிறது. எனவே நீங்கள் இலவசங்களை அரசியல் ரீதியாக அல்ல, நிதி திட்டமிடல் மூலம் சமாளிக்க வேண்டும்,” என்றார் கபில் சிபல்.
இதைத்தொடர்ந்து வாதிட்ட மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், “தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட இலவசங்கள் குறித்தது மட்டுமே தற்போதைய வழக்கு. அது இதுபோன்ற வாதங்கல் மூலம் திசை திருப்பப்பட்டு வருகிறது என்று கூறினார், மேலும் இலவசங்களுக்கான விதிகளை வகுக்க நாடாளுமன்றம் அல்லது தேர்தல் ஆணையம் சட்டம் இயற்றும் வகையில் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
ஆம் ஆத்மி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏஎம் சிங்வி, மனுதாரர் தேர்தல் வாக்குறுதிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கக் கோருகிறார். இது அரசியலமைப்பு விதி 19(1) (ஏ) வழங்கியுள்ள உரிமைக்கு மீறலாக அமையும் என்று வாதிட்டார். தேர்தலில் பேசப்படும் விஷயங்களுக்கு நீதிமன்றத்தால் கட்டுப்பாடு விதிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்க போதிய நேரமின்மையால், வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (ஆகஸ்ட் 24) தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
https://www.youtube.com/watch?v=CCfWqiv-_e4
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்