ஈரோடு: ஈரோட்டில் அரசு பள்ளி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையில் ஏசி வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. வகுப்பறைகளில் இருந்து மாணவர்கள் உடனே வெளியேற்றப்பட்டதால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஈரோடு திருநகர் காலனியில் உள்ள மாநகராட்சி இடைநிலை பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையில் தன்னார்வ அமைப்புகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியை அருணாதேவி ஏசி இயந்திரத்தை இயக்கியுள்ளார். அப்போது திடீரென்று புகை வந்ததால் அதிர்ச்சி அடைந்தவர் அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். அதற்குள் ஏசி இயந்திரம் வெடித்துச் சிதறி தீ பிடித்து எரிந்தது.
இதனால் அந்த அறையில் தீ பற்றியது. அறையில் இருந்த கணினி, பிராம்டர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. நல்வாய்ப்பாக அங்கு யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. அருகில் இருந்த வகுப்பறைகளில் இருந்த மாணவ, மாணவிகள் மற்ற அறைகளுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்து கல்வித்துறை மாநகராட்சி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த ஏசி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.