புதுடெல்லி: தரையிலிருந்து விண்ணில் ஏவப்படும் குறுகிய தொலைவு ஏவுகணையை டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படை வெற்றிகரமாக ஏவி சோதித்துள்ளது.
டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய கடற்படையும் இணைந்து ஒடிஷா மாநிலம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை ஏவுதளத்திலிருந்து குறுகிய தொலைவு சென்று தாக்கும் ஏவுகணையை செவ்வாய்க்கிழமை (ஆக. 23) வெற்றிகரமாக ஏவி சோதித்தது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடியோ அதிர்வெண் உபகரணம் பொருத்தப்பட்ட ஏவுகணைகள் இலக்கை இடைமறித்து துல்லியமாக தாக்கியன. இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே டிஆர்டிஓ-வால் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ, இந்திய கடற்படை மற்றும் தொடர்புடைய குழுவினரை பாராட்டினார். இந்த ஏவுகணை இந்திய கடற்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல டிஆர்டிஓ தலைவரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலரும், வெற்றிகரமாக சோதனையை நிகழ்த்திய குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.