NDTV நிறுவனத்தின் 29.18% பங்குகளை கைப்பற்றும் அதானி குழுமம்; முகேஷ் அம்பானிக்கு கடும் போட்டி!

அதானி குழுமத்தின் ஓர் அங்கமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் தற்போது ஊடகத்துறை சார்ந்த முன்னணி குழுமமான என்டிடிவி நிறுவனத்தின் 29.18% பங்குகளை கையகப்படுத்த உள்ளது. இதன் மூலம் அது மீடியா துறையில் முகேஷ் அம்பானிக்கு பெரும் போட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்டிடிவி நிறுவனம் என்டிடிவி இந்தியா, என்டிடிவி 24/7 மற்றும் என்டிடிவி ப்ராஃபிட் ஆகிய மூன்று முன்னணி செய்தி நிறுவனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

அதானி குழுமம்

என்டிடிவி நிறுவனத்தின் இந்தப் பங்குகள் ரதி மற்றும் பிரணாய் ராய் ஆகியோரின் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங்சின் கைவசம் உள்ளது. இந்த நிறுவனம் 2009 -ம் ஆண்டு தனது கைவசமுள்ள என்டிடிவி பங்குகளை விஷ்வ பிரதான் கமர்சியல் லிமிடெட் (VPCL) நிறுவனத்திடம் அடமானம் வைத்து 403 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்தது.

இந்தக் கடனை திரும்பச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த தவணை காலம் 2019 -ம் ஆண்டு முடிந்துவிட்டது. கடனை ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனம் திரும்ப செலுத்தாத காரணத்தினால் தற்போது VPCL நிறுவனம் அந்தப் பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. அந்தப் பங்குகளை தான் அதானி குழுமம் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதானி குழுமம்..!

கௌதம் அதானியை தலைவராகக் கொண்ட அதானி குழுமம் நமது நாட்டில் பல்வேறு துறைகளில் தமது வணிகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. சென்ற மாதம் இஸ்ரேல் நாட்டில் உள்ள ஹைபா துறைமுகத்தை 1.2 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.

ஹைபா துறைமுகம்

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஹொல்சிம் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி நிறுவனத்தின் பங்குகளை 10.5 பில்லியன் டாலருக்கு அதானி குழுமம் வாங்கியுள்ளது.

மேலும் மூன்று டஜனுக்கும் மேல் சிறிய நிறுவனங்களை அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. மீடியா, ஹெல்த் கேர், சிமெண்ட் மற்றும் டிஜிட்டல் சர்வீஸ்கள் சார்ந்த துறைகளில் தமது கிளைகளை வேகமாக அந்த நிறுவனம் பரப்பி வருகிறது.

5ஜி சேவைகளுக்கான ஏலத்தில் பங்கேற்பு..!

மேலும் 5ஜி சேவைகளுக்கான ஏலத்தில் பங்கேற்று நமது நாட்டின் முதன்மையான நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக உருவெடுத்துள்ளது. ஆனால் அந்த நிறுவனம் விரைவாக வளர்வதற்கு அதிக அளவில் கடன்களை வாங்குவதாக பிரபல கிரெடிட் ஏஜென்சியான ஃபிச் குரூப்பின் அங்கமான கிரெடிட் சைட்டின் ரிசர்ச் ரிப்போட் செய்தி வெளியிட்டுள்ளது.

கவுதம் அதானி

அதானி குழுமம் வங்கிகளிடம் உள்ள தமது செல்வாக்கை பயன்படுத்தி அதிக அளவு கடன்களை வாங்குவதாகவும் அந்த ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. மேலும் நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கௌதம் அதானிக்கு உள்ள செல்வாக்கு காரணமாக அதிக கடன்களை அந்த நிறுவனம் பெறுவதாக அந்த ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

மிக அதிகமான கடன் அந்த நிறுவனத்தை கடன் சுமையில் தள்ளிவிடும் என்றும் அதனை சரியாக கையாளவில்லை என்றால் கடுமையான நிதி நெருக்கடிக்கு அந்த நிறுவனம் தள்ளப்படும் என்றும் அந்த ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிக்கையின் விவரங்களை என்.டி.டிவி அதன் இணைய தளத்தில் விரிவாக வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் அதன் பங்குகளை அதானி குழுமம் வாங்குவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

நமது பங்குச் சந்தையில் அதானி குழுமத்தை சேர்ந்த 6 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு ஏற்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் அதிக லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி கிரீன் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்குகள் 13 மடங்கு உயர்ந்துள்ளது. அதானி குழுமத்தின் பிற நிறுவனங்களும் பல மடங்கு லாபத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது.

ஆனால் தற்போது கிரெடிட் சைட் நிறுவனத்தின் எச்சரிக்கை வெளியீட்டுக்கு பிறகு இன்று அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் 2 முதல் 7 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

முகேஷ் அம்பானி, கெளதம் அதானி

பங்குச் சந்தையில் அதிக கடன் சுமை உள்ள நிறுவனங்களின் பங்குகள் பொதுவாக அதிக ரிஸ்க் உடையவை ஆகும். ஆனால் கௌதம் அதானி தற்போது ஆசியாவின் விரைவாக வளரும் பணக்காரர்களில் முதன்மையானவராக உள்ளார்.

நமது நாட்டில் குறுகிய காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக அதானி குழுமம் உயர்ந்துள்ளது. தற்போது கிரெடிட் சைட் வெளியிட்டுள்ள எச்சரிக்கை மணி உடனடி பாதிப்புகளை அந்த நிறுவனத்திற்கு பெரிய அளவில் ஏற்படுத்திவிடாது. ஆனால் வரும் காலங்களில் அதானி குழுமம் அதன் கடன்களை எவ்வாறு கையாள இருக்கிறது என்பதை பொறுத்துத்தான் அந்த நிறுவனப் பங்குகள் அதன் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வழங்கும். மேலும் கடந்த 2 ஆண்டுகளில் அதிக அளவு லாபத்தை இந்த நிறுவன பங்குகள் வழங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபத்தை புக் செய்வதற்கும் வாய்ப்புள்ளது.

இவை அனைத்தையும் இந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் அறிந்து தமது முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.