விளாடிமிர் புடினின் கடற்படை பயன்படுத்தும் சோனார் கருவிகளால் இந்த இழப்புகள்
கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களே உயிரிழப்புகளுக்கு காரணம்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் இதுவரை 5,000 க்கும் மேற்பட்ட டால்பின்கள் இறந்துள்ளதாக நிபுணர்கள் தரப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவலில், விளாடிமிர் புடினின் கடற்படை பயன்படுத்தும் சோனார் கருவிகளால் இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்று உயிரியலாளர் Ivan Rusev தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை வெளியான எண்ணிக்கை மிகவும் குறைவு எனவும் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, இறந்த டால்பின்களில் 5% மட்டுமே இதுவரை கரை ஒதுங்கியுள்ளதாகவும் Ivan Rusev தெரிவித்துள்ளார்.
மேலும், எஞ்சிய 95% கருங்கடலின் அடிப்பகுதியில் மூழ்கியுள்ளதாகவும் Ivan Rusev கூறியுள்ளார்.
ரஷ்யர்கள் பயன்படுத்தும் சோனார் கருவிகளால் தான் கடல்வாழ் உயிரினங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என Ivan Rusev தமது பேஸ்புக் பக்கத்தில் முன்னரே கூறி வந்துள்ளார்.
சோனார் கருவிகளால் டால்பின்கள் ஈர்க்கப்பட்டுள்ளதுடன், அதன் உள்ளுறுப்புகள் செயல்படாமல் போவதாகவும், இதனால் கதிர்வீச்சு வட்டத்திற்கு வெளியே செல்ல முடியாமல் ஆபத்தில் சிக்குவதாகவும் Ivan Rusev கூறியுள்ளார்.
சோனார் கருவிகள் மட்டுமின்றி இப்பகுதியில் டால்பின்கள் எதிர்கொள்ளும் மற்றொரு ஆபத்து குண்டுவெடிப்பினால் ஏற்படும் அதிர்வுகள் ஆகும், இது டால்பின்களின் கண்பார்வையை பாதிப்பதாக Ivan Rusev தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகத்தின் தகவலின் படி,
கடந்த நூற்றாண்டில், கருங்கடலில் சுமார் 6 மில்லியன் டால்பின்கள் இருந்துள்ளன. தற்போது, அந்த எண்ணிக்கை 253,000 என்று நம்பப்படுகிறது. அதாவது 20 மடங்குக்கு மேல் சரிவை எதிர்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.