மீண்டும் அஜய் ஞானமுத்து படம் : உறுதிப்படுத்திய விக்ரம்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல விதமான வேடங்களில் விக்ரம் நடித்துள்ள ஆக் ஷன் படம் ‛கோப்ரா'. கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கொரோனா போன்ற பிரச்னையால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இந்தப்படம் இப்போது ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. அடுத்தவாரம் ஆக., 31ல் படம் வெளியாக உள்ள நிலையில் இன்று முதல் படத்தின் புரொமோஷன் பணிகளில் கோப்ரா படக்குழு இறங்கி உள்ளது. அதன்படி திருச்சியில் இன்று கல்லூரி ஒன்றில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட கோப்ரா படக்குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய விக்ரம், ‛‛நான் திருச்சிக்கு சிறு வயதில் வந்திருக்கிறேன். நிறைய சுத்தியிருக்கிறேன். 'கோப்ரா' படத்தைப் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது. உங்களுக்கு அந்நியன் பிடிக்குமெனில் அது இதில் இருக்கிறது. அதைத்தாண்டி சயின்ஸ் பிக்சன் இருக்கிறது. எமோஷன் காமெடி ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும்.
அஜய் ஞானமுத்துவின் முதல் இரண்டு படங்களும் வித்தியாசமாக இருக்கும். அதே போல் இந்தப்படமும் மிக வித்தியாசமாக செய்துள்ளார். படம் மிக ப்ரெஷ்ஷான படமாக இருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள். அடுத்து ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அதை முடித்ததும் மீண்டும் அஜய் ஞானமுத்து உடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். அந்த படம் ரசிகர்களை உலகளவில் கவரும் கதையாக இருக்கும்''.
இவ்வாறு விக்ரம் கூறினார்.