சென்னை: சினிமாவில் தற்சமயம் கொடி கட்டி பறப்பவர்கள் பலரும் இதற்கு முன்னர் செய்த வேலைகளை விட்டுவிட்டு ரிஸ்க் எடுத்துதான் சினிமாவில் நுழைந்திருக்கிறார்கள்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் ரஜினிகாந்த் கண்டக்டர் வேலையையும் நடிகர் நாகேஷ் ரயில்வே வேலையையும் விட்டுவிட்டுத் தான் நடிக்க வந்து பெரிய வெற்றி கண்டார்கள்.
அந்த வகையில் தற்சமயம் டாப் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்
விஜய் ஆச்சர்யம்
முதல் படத்திலிருந்து நல்ல இயக்குநர் என்ற பெயரை பெற்ற லோகேஷின் வளர்ச்சி இப்போது அசுரத்தனமாக இருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் தனது கேரியர் கிராஃப்பை உயர்த்திக் கொண்டே செல்கிறார். மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது,”ஒரு நபர் துணை இயக்குநராக இருந்து இயக்குநராக மாறுவார், சிலர் குறும்படங்கள் எடுத்து இயக்குநராக மாறுவார்கள். இப்படி சினிமா சம்பந்தப்பட்ட ஏதோ செய்து கொண்டுதான் ஒரு நபர் இயக்குநர் ஆவா.ர் ஆனால் பேங்கில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு நபர் எப்படி இயக்குநர் ஆனார் என்று எனக்கு பல நாள் சந்தேகம் இருக்கிறது” என்று விஜய் பேசியிருப்பார்.
அப்பாவை பழி வாங்கிய லோகேஷ்
சிறு வயதிலிருந்தே சினிமா மீது அதிகமாக ஆர்வமாக இருந்ததால், நீ இப்படியே இருந்தால் சினிமாவிலேயே மூழ்கி சாகப் போகிறாய் என்று அவரது அப்பா கடுமையாக கண்டிப்பாராம்.சினிமாவிற்கு வருவதற்கு முன் தனது பெயரை லோகேஷ் என்று மட்டும்தான் எழுதி வந்துள்ளார். ஆனால் சினிமாவில்தான் லோகேஷ் கனகராஜ் என்று தனது அப்பாவின் பெயரையும் இணைத்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். “உன்னை உன்னை ஸ்வீட்டாக பழிவாங்கத்தான் உனது பெயரையும் சேர்த்து சினிமாவில் போட்டுக் கொள்கிறான்” என்று தனது தம்பி அடிக்கடி தனது அப்பாவிடம் கூறுவார் என்று லோகேஷ் கூறியுள்ளார்.
பேங்க் வேலை
இந்நிலையில் தான் வங்கியில் சேர்ந்ததே ஒரு குட்டி ஸ்டோரி என்றும் வங்கி வேலை கிடைக்கும் என்றும் வங்கியில் வேலை பார்க்கும் போது டெபிட் கிரெடிட் கூட தனக்கு தெரியாது என்றூம் கூறியுள்ளார். தேர்வு எழுதிவிட்டு ஒரு குரூப் டிஸ்கஷனில் வெற்றி பெற்றால் வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்தபோது, பத்து பத்து நபர்களாக குரூப் டிஸ்கஷனுக்கு அழைத்தார்கள். நான் சென்றபோது கொடுக்கப்பட்ட டாபிக் இன்றைய சினிமா இளம் தலைமுறையினரை இன்ஃப்லுவன்ஸ் செய்கிறதா என்பதுதானாம். கேள்வி கேட்டவுடன் பதில் தெரியுமா தெரியாதா என்று கூட யோசிக்காமல் உடனே கையை தூக்கி மனதில் தோன்றியதை பேச, அவருக்கு வேலை கிடைத்ததாம்.
வேலை கிடைத்திருக்காது
வங்கி வேலை கிடைக்கும்போது கூட எனக்கு சினிமா தான் உதவியது. ஒருவேளை அன்று எக்கனாமிக்ஸ் பற்றியோ வேறு ஏதாவது தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தாலோ கண்டிப்பாக எனக்கு வங்கி வேலை கிடைத்திருக்காது என்று லோகேஷ் நகைச்சுவையாக அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.