புத்ரஜயா : அரசு நிதியைக் கொள்ளையடித்தது தொடர்பான வழக்கில், மலேஷிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு விதிக்கப்பட்ட, 12 ஆண்டு சிறை தண்டனையை, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
ஆசிய நாடான மலேஷியாவின் பிரதமராக, 2009 முதல் 2018ம் ஆண்டு வரை இருந்தவர் நஜிப் ரசாக், ௬௯. மிகவும் அதிகாரமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த இவர், நாட்டின் இளம் எம்.பி., இளம் அமைச்சர் என, பல பெருமைகளை பெற்றவர்.கடந்த 2009ல், இவர் பிரதமராக பதவியேற்றதும், ‘1 எம்.டி.பி.,’ என்ற அரசு நிதி அமைப்பை உருவாக்கினார்.
இதில் இருந்து, ரசாக்கின் நெருங்கிய கூட்டாளிகள், 36 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், நஜிப் ரசாக், 75 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக, நஜிப் ரசாக் மீது, ஐந்து வழக்குகளில், 42 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த மோசடி தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்றம், ரசாக்குக்கு, 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2020ல் தீர்ப்பு அளித்தது.இதையடுத்து கைது செய்யப்பட்ட ரசாக், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றத்தை உறுதி செய்து நேற்று தீர்ப்பு அளித்தது. அதன்படி, 12 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement