சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முன்னாள் முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை நாளை (ஆக. 25) தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் அம்மன் பி.வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர்.
அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவும், ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கேவியட் மனுக்களும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன், “இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க வேண்டாம். நேரடியாக மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் எங்களது சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக வேண்டியிருப்பதால், விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “நேரடியாக மேல்முறையீட்டு மனுக்கள் மீது வாதங்களை முன்வைக்க நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஆக. 25-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.