புதுடில்லி : ‘அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதால் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்த விவாதம் நிச்சயம் தேவை’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக நிதி அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான தியாகராஜன் கூறியுள்ள கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பையும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
‘தி.மு.க., மட்டும் தான் அறிவாளியா’ என, நீதிபதிகள் குட்டு வைத்துள்ளனர்.’தேர்தல்களின்போது இலவச அறிவிப்புகள் வெளியிடும் கட்சிகளை முடக்க வேண்டும்; கட்சி சின்னத்தை முடக்க வேண்டும்’ என கோரி, அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.’இலவசங்கள் வழங்குவதால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராயப்பட வேண்டும்.
இலவசங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க, நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது.இந்த வழக்கில், தி.மு.க., டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்களை இணைத்துக் கொண்டு உள்ளன.தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.பி., வில்சன், தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க வந்தார். அப்போது தலைமை நீதிபதிகூறியதாவது:இந்த விவகாரத்தில் உங்களுடைய கட்சி மற்றும் தமிழக நிதியமைச்சர் கூறி வரும் கருத்துகளை, நாங்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறோம். நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்பதற்காக, கண்ணை மூடிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணி விடாதீர்கள். தலைமை நீதிபதியாக இருப்பதால் என்னை கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.ஏதோ, தி.மு.க., மட்டும் தான் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். இந்த விஷயத்தில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. உங்கள் தரப்பில் பேசப்படும் விதம், அறிக்கைகள் கொடுப்பது போன்றவற்றை நாங்கள் கவனிக்கவில்லை என்று மட்டும் நினைக்காதீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ”தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக கூறிய கருத்துகளை பார்த்தேன். அது சரியானது அல்ல,” என்று குறிப்பிட்டார்.இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது:இலவசங்கள் என்பது வேறு, மக்கள் நலத் திட்டங்கள் என்பது வேறு. நகரத்தில் இருப்பவருக்கு கிடைக்கும் ஒரு பொருள், அவருக்கு இலவசமாக இருக்கலாம். ஆனால், கிராமப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு, அதுவே வாழ்க்கையை நடத்துவதற்காக இருக்கும்.அதனால், இந்த விவகாரத்தில் விவாதம் தேவை. நாங்கள் இந்த விஷயத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று உத்தரவிட விரும்பவில்லை. அதுபோல கட்டுப்பாடுகளை விதிக்கவும் விரும்பவில்லை.அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒரே தரப்பாக உள்ளன. அதுபோல இலவசங்கள் தொடர வேண்டும்என்றே அனைவரும் விரும்புகின்றனர்.ஆனால், இந்த இலவசங்களால் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்து, நிச்சயம் விவாதம் நடத்த வேண்டும். இது தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும். அதற்கான களத்தை உருவாக்கும் வகையிலேயே நிபுணர் குழுவை நியமித்து, மக்களின் கருத்துகளை திரட்ட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். நாட்டின் நலனுக்காகவே இந்த விவகாரத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.வழக்கின் விசாரணை இன்றும் தொடர உள்ளது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, வரும் 26ம் தேதி ஓய்வு பெற உள்ளார். அதற்குள் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement