திருத்தணி: திருத்தணி வட்டம், திருவாலங்காடு ஒன்றியம், கூளூர் கிராம கன்னியம்மன் கோயில் குளம் ரூ.2,18,000 செலவில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இந்த விழாவில் ஓராசிரியர் பள்ளிகளின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் விஜயராகவன், சிவராமகிருஷ்ணன், மகேஷ் ஆகியோர் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டனர். கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையில் தூர்வாரப்பட்ட அனைத்து குளங்களும் நிரம்பியதை கிராம மக்கள் மிக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் களமேற்பார்வையாளர்கள் உள்பட கலந்து கொண்டனர். சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் அதன் அங்கமான ஓராசிரியர் பள்ளிகளின் மூலம் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள 1700 கிராமங்களில் 51 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியை இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் கிராமங்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக கழிப்பறையுடன் கூடிய குளியறைகள் இலவசமாக கட்டித்தருவது, கோயில் குளங்கள் தூர்வாருவது, இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இதுவரை 65 கிராம கோயில் குளங்கள் ரூ.174 லட்சங்கள் செலவில் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு படிகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கிராம மகளிர் மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டிற்காக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதத்தில் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், உளுந்தை கிராமத்தில் விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்க ஆசிரியர் பயிற்சி வளாகத்தில் மகளிருக்கான தையல் பயிற்சி மற்றும் இளைஞர், பெண்களுக்கான கணிணி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் கணிணி வன்பொருள், பிளம்பிங், வெல்டிங், இருசக்கர வாகன மெக்கானிசம், மொபைல், கார்பெண்ட்ரி, எலெக்ட்ரிகல் வயரிங், பம்ப் , மோட்டார் வைண்டிங் போன்ற பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. இந்த இலவச வசதியை பயன்படுத்தி கிராம இளைஞர்கள் மற்றும் மகளிர் வாழ்க்கையில் மேம்பட வேண்டும் என ஓராசிரியர் பள்ளி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.