பெங்களூரு: பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையில் (எஸ்பிஜி) கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல வேட்டை வகை நாயான முதோல் வகை நாய்கள் சேர்க்கப்படவுள்ளன.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் முதோல் பகுதியில் பிரபலமாக உள்ளவை முதோல் வகை நாய்கள். இவை பார்ப்பதற்கு தமிழகத்திலுள்ள சிப்பிப்பாறை வகை நாய்களைப் போலவே காணப்படும். இந்த முதோல் வகை நாய்கள் வேட்டை, மோப்பம் பிடித்து ஆட்களை அடையாளம் காண வெகுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், இந்த வகை நாய்களை பிரதமரின் எஸ்பிஜி படையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாகல்கோட்டை மாவட்டம் திம்மாப்பூர் அருகே முதோலில் அமைந்துள்ள கேனைன் ரிசர்ச் அன்ட் இன்பர்மேஷன் சென்டரிலிருந்து (சிஆர்ஐசி) 2 நாய்க்குட்டிகளை எஸ்பிஜி குழுவினர் வாங்கிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சிஆர்ஐசி இயக்குநர் சுஷாந்த் ஹண்டே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: எஸ்பிஜி குழுவினர். முதோல் நாய்களின் செயல்திறனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து பயிற்சி அளிப்பதற்காக 2 குட்டிகளை வாங்கிச் சென்றனர்.
ஏற்கெனவே இந்திய ராணுவம், விமானப்படை, துணை ராணுவப் படைகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), மாநில காவல்துறை, வனத்துறை அதிகாரிகளும் இந்த வகை நாய்களின் செயல்திறனைக் கண்டு வாங்கிச் சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
சிஆர்ஐசி அமைப்பு கர்நாடக கால்நடை, விலங்குகள் மற்றும்மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழக இயக்குநர் பி.வி.சிவப்பிரகாஷ் கூறும்போது, “தூரத்தில் கேட்கும் சிறு சத்தத்தைக் கூட இந்த வகை நாய்கள் கேட்டு மோப்பம் பிடிக்க ஆரம்பித்துவிடும். மேலும் அதிக வேகத்தில் ஓடி வேட்டையாடும். மிகவும் உயரமான வேலி, மதில் சுவர்கள் போன்றவற்றைக் கூட தாண்டிக் குதிக்க வல்லவை. மற்ற நாய் வகையுடன் ஒப்பிடும்போது எந்தவித சீதோஷ்ண நிலையிலும் உயிர் வாழக் கூடியவை முதோல் இன நாய்கள்’’ என்றார்.