பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள சித்தலி கிராமத்தில் நல்லதங்காள் அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு 50 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இரவு வழக்கம் போல் பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோயிலைப் பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அதிகாலை கோயிலின் பின்புறத்தில் மர்ம நபர்கள் சிலர் மறைந்திருப்பதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் சத்தம் போட்டிருக்கிறார்.
சத்தம் கேட்டதும் அந்த மர்ம நபர்கள் சுதாரித்துக் கொண்டு கோயிலுக்குப் பின்புறம் உள்ள வயல் வெளியில் குதித்துத் தப்பித்து ஓடியிருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த ரவி இது குறித்து கோயில் தர்மகர்த்தா பழனிசாமிக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.
பின்னர் பழனிசாமியும், ரவியும் மர்ம நபர் ஓடிய திசையில் சென்று பார்த்தபோது வயல் காட்டில் கோயிலின் ராஜகோபுரத்தில் உள்ள ஐந்து கலசங்கள், கருவறை கலசம் ஒன்று, மூலஸ்தான கலசம் ஒன்று, சிறிய அளவில் ஆன ஏழு பித்தளை மணிகள், ஒரு பெரிய பித்தளை மணி, எண்ணெய் கிண்ணம் 2 கிடந்தது. இந்த பொருள்களைத் தர்மகர்த்தா எடுத்து கோயிலின் மண்டபத்துக்குக் கொண்டு வந்தார்.
பின்னர் குன்னம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபரை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர். வயல் காட்டில் கிடைத்த பொருட்கள் இங்குத் திருடப்பட்டதா அல்லது வேறு கோயிலில் திருடிடப்பட்டதா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணை செல்கிறது.
கடந்த வாரம் அரியலூர் மாவட்டத்தில் கோயில்களில் தொடர் கைவரிசை காட்டும் கும்பலை போலீஸார் கைது செய்தனர். அதே போல் இவர்களும் கலசம் திருடும் கும்பலா அல்லது உண்டியலை குறி வைத்து கொள்ளையடிக்கும் கும்பலா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.