தமிழக மின்வாரியம் சார்பில் சமூக வலைதளங்களில் கணக்கு தொடக்கம்: பொதுமக்கள் ஆலோசனை தெரிவிக்கலாம்

தமிழக மின்வாரியம் சார்பில் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மின்தடைபற்றிய புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

மின்தடை, மின்சார விபத்து,மின்மாற்றிகள், பில்லர் பாக்ஸ் உள்ளிட்ட மின்சாதனங்களில் ஏற்படும் பழுதுகள் உள்ளிட்ட புகார்களை தெரிவிப்பதற்கு வசதியாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ‘மின்னகம்’ என்ற நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தை 94987 94987 என்ற செல்பேசி எண் மூலம் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். தற்போது மத்திய அரசின் அனைத்து துறைகளும், துறை அமைச்சர்களும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளைத் தொடங்கி அதன்மூலம் தங்களது துறைசார்ந்த தகவல்கள், அறிவிப்புகள், திட்டங்கள் உள்ளிட்டவற்றைவெளியிட்டு வருகின்றனர்.

அதேபோல், தமிழக அரசும், அமைச்சர்களும் சமூக வலைதளங்களைப்பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம், மின்வாரியம் சார்பில் சமூக வலைதள கணக்கு இல்லாததால், பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் தங்களது புகார்களைத் தெரிவிக்க மின்னகத்தை மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது.

இந்நிலையில், ட்விட்டர் (@TANGEDCO_Offcl), இன்ஸ்டாகிராம் (@tangedco_official), ஃபேஸ்புக் (@TANGEDCOOffcl) ஆகிய சமூக வலைதளங்களில் மின்வாரியம் கணக்குகளைத் தொடங்கியுள்ளது. இதில், மின்சாதன பராமரிப்புக்காக மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள், மின்னணு (டிஜிட்டல்) மின்கட்டண விழிப்புணர்வு விவரங்கள் பதிவிடப்படுகின்றன.

அத்துடன், புகார்களையும் பொதுமக்கள் அளிக்கலாம். இவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மின்வாரியத்தின் செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை பொதுமக்களிடம் இருந்து கேட்டுப் பெற்று, அதை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.