சமீபத்தில் தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அறிக்கையானது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆணையம் சார்பில் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக மக்களின் கருத்துக்களைக் கேட்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக, கோவை, மதுரையில் மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. பின் நேற்று முந்தினம் (22.08.2022) சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மேலும், உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி பங்கேற்றனர். சென்னை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தொழில் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த கூட்டத்தில் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர். தற்போதுள்ள சூழலில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் அது அனைவரையும் கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் 91 பேர் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். தட்டச்சு பயிற்சிப் பள்ளி நடத்தும் சுப்பராமன் என்பவர் பேசும்போது, “தட்டச்சு பயிற்சிப் பள்ளிகளுக்குக் கல்வி நிறுவன சேவையில்தான் முன்பு கட்டணம் வசூல் செய்யப்பட்டது. நடுவில், தட்டச்சு பயிற்சி பள்ளிகளுக்கு வர்த்தக நிறுவனங்களுக்கு வசூல் செய்யும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4,000 தட்டச்சு பயிற்சி பள்ளிகள் இருக்கின்றன. எங்கள் நிறுவனங்களைக் கல்வி நிறுவனங்கள் பிரிவில் சேர்ந்து கட்டணத்தை மாற்றவேண்டும்” என்று முறையிட்டார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகம் பேசும்போது, “மின்சாரத்துறையின் கட்டுமான பணிகளைச் சரியான காலகட்டத்தில் முடிக்காத காரணத்தால் 12,474 கோடி செலவு அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த கூடுதல் செலவுகளை மக்கள் தலையில் சுமத்துவது நியாயம் கிடையாது. 100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம் செயல்படுத்துவதாகத் தெரிகிறது. இது கேஸ் மானியம் கொடுத்த கதையாகிவிடும். தனியார் நிறுவனங்களுக்குக் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் நீண்டகால ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது” என்று பேசினார்.
மயிலாடுதுறை இறால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாகப் பேசியவர்கள், “மின்சார கட்டணம் அதிகரித்தல் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவோம். இறால் வளர்ப்பு என்பதும் ஒருவகையில் விவசாயம் சார்ந்த தொழில்தான். எங்களுக்குத் தொழில் நிறுவனங்களுக்கு வசூல் செய்யும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்குக் கட்டண மாற்றம் தேவை. டீசல் விலை உயர்வு காரணமாக டீசலை மட்டுமே நம்பி நாங்கள் தொழில் நடத்த முடியாது. மழை, புயல், வெள்ளம் என்று பல்வேறு காரணங்களால் எங்கள் தொழில் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதில் மின்சார கட்டணம் உயர்ந்தால் நாங்கள் பெரிதாகப் பாதிக்கப்படுவோம்” என்று பேசினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா பேசும்போது, “இந்த கருத்துக்கேட்பு கூட்டம் மூன்று இடங்களில் மட்டுமே நடத்தியிருக்கிறீர்கள். தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களிடம் கருத்துக்கேட்க வேண்டும். மின்சார கட்டண உயர்வு தொடர்பாக தற்போது வந்துள்ள அறிவிப்பில் பல்வேறு மறைமுக கட்டணங்கள் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 6 சதவிகிதம் கட்டணம் உயர்த்தலாம் என்று கூறப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. நிலக்கரிகளை வெளிநாட்டிலிருந்து வாங்க நிர்பந்திக்கப்படுகிறது. பெரும் முதலாளிகளுக்கு உதவ மத்திய அரசுத் திட்டம் போடக்கூடாது. இந்த மின்கட்டண உயர்வு குறித்து அனைத்து பொதுமக்களுக்கும் புரியும் வகையில் தெளிவாக விளக்க வேண்டும்” என்று தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பலரும் மின்கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர். மேலும், 220-க்கும் மேற்பட்டோர் தங்களின் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக ஆணையத்தில் வழங்கியிருக்கிறார்கள். மின்சார கட்டணத்துடன் பல்வேறு மறைமுக கட்டணங்கள் இந்த புதிய அறிவிப்பில் இடம்பெற்றிருப்பதாகப் பலர் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக மின்சார துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம், “கட்டண உயர்வு தொடர்பாகப் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கிறது. இதில் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் துறை ரீதியாக ஆலோசனை நடத்தப்படும். கட்டணத்தில் என்ன மாற்றம் ஏற்படுத்தவேண்டும் என்பதுகுறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்சாரத்துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின்கட்டண உயர்வு தேவையாகிறது. மின்கட்டண உயர்வு தொடர்பாகச் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் பிக்சட் சார்ஜ், டிமாண்ட் சார்ஜ் அதிகமாக இருப்பதாகக் கோரிக்கை முன்வைத்திருக்கிறார்கள். முதல்வரின் உத்தரவின்படி, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து மின்சார வாரியம் பிக்சட் சார்ஜ், டிமாண்ட் சார்ஜ் கட்டணத்தில் மாற்றம் செய்து ஓரிரு நாள்களில் ஒழுங்குமுறை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் மின்கட்டண உயர்வு குறித்து பெறப்பட்டுள்ள மக்களின் கருத்துகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.