ஹெச்.ஓ.டி மீது மாணவி பாலியல் புகார்; பேராசிரியர்கள் போர்க்கொடி: கொந்தளிப்பில் திருச்சி ஈ.வே.ரா கல்லூரி 

திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரி கடந்த 24-8-1965 துவங்கப்பட்டது. இந்த கல்லூரி துவங்குவதற்கு தந்தை பெரியார், தங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை வழங்கினார்.

இந்த கல்லூரியில் திருச்சி மட்டுமல்லாமல், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கடந்த 55 ஆண்டுகளாக இங்கு படித்து முடித்துள்ளனர். பெரியார் இறப்புக்கு பிறகு இந்த கல்லூரிக்கு அவரின் பெயர் சூடப்பட்டது. இக் கல்லூரியில் பயின்றவர்கள் அரசின் ஆதிக்கம் செலுத்தக்கூடிய துறைகளில் இன்றும் பணியாற்றி வருகின்றனர்.

இப்படி புகழ்பெற்ற  ஈ.வெ.ரா கல்லூரியில் பணியாற்றும் ஆங்கிலத்துறை தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. 

அதேநேரம்  ஆங்கிலத்துறைத் தலைவருக்கு கீழ் இனியும்  தங்களால்  பணியாற்ற முடியாது என அத்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் 17 பேர்  கல்லூரி முதல்வரிடம் கடிதம் கொடுத்திருக்கும் சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  ஆங்கிலத்துறை பேராசிரியர் மற்றும் துணைத் தலைவராக பணியாற்றி வருபவர் ஜெயக்குமார் (வயது 54). இவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி கல்லூரி மாணவிகள் மற்றும் ஆராய்ச்சித்துறை மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக தொடர்ந்து  குற்றச்சாட்டுக்கள்  எழுந்தன.

இது தொடர்பாக, கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாத  நிலையில், இக்கல்லூரியில் முதுகலை பயிலும் மாணவி ஒருவர், பேராசிரியர் ஜெயக்குமார் மீது  கல்லூரி முதல்வர் சுகந்தியிடம் பாலியல்  புகார் ஒன்றை அளித்தார். அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காத நிலையில், முதல்வரின் தனிப்பிரிவு, கல்லூரிக் கல்வி இயக்குனர் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு மாணவி தரப்பில், பேராசிரியர் மீதான புகார்  அனுப்பப்பட்டிருந்தது.

அதையடுத்து இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை செய்ய கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டதன் பேரில் கடந்த ஜூலை 23ம் தேதி குழு அமைக்கப்பட்டு, ஜூலை 25ம் தேதி முழுமையான அறிக்கை தயார் செய்து, கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரிக்கல்வி இயக்குனருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு 25 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  அதனையடுத்து ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் அனைவரும் (17பேர்) கல்லூரி முதல்வரைச்  சந்தித்து துறைத் தலைவரின் செயல்பாடுகள் தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகவும், அவர் துறைத் தலைவராக இருப்பதை விரும்பவில்லை என்றும், அவருக்கு கீழ் இருந்து தங்களால் பணியாற்ற முடியாது எனவும் அவர் மீது தங்களால் பணியாற்ற முடியாது எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளனர். இது கல்லூரி வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய   கல்லூரி    முதல்வர் சுகந்தி, “மாணவி வழங்கிய புகாரில் முகாந்திரமும் உண்மைத் தன்மையும் உள்ளது.

 ஜாதிய ரீதியில் செயல்பட்டு வரும் பேராசிரியர்  ஜெயக்குமார், ஒரு  கட்சியின்  தலைவர்  பெயரை பயன்படுத்தி கல்லூரி முதல்வரான எனக்கும் மிரட்டல் விடுத்தார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  இதுதொடர்பாக கல்லூரி கல்வி  இயக்குனரகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.

செய்தி : க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.