கள்ளக்குறிச்சி: பெண் குழந்தையை கொன்றுவிட கணவர் வீட்டார் நிர்பந்தம் செய்ததை அடுத்து அந்த குழந்தையை காப்பாற்ற தாய் ஒருவர் தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சந்தை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்சா (25). இவர் அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் போது தஸ்தகீருக்கு புல்லட் பைக், 50 பவுன் நகை, ரூ 1 லட்சம் சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. திருமணம் ஆன நாள் முதல் தன் மகனை வளைத்து போட்டு திருமணம் செய்தார் என அவரது பெற்றோர் அப்சாவை கடுமையாக விமர்சித்து வந்ததாக தெரிகிறது.
அப்சா திருமணம்
அப்சாவின் திருமணத்திற்கு போட்ட அனைத்து நகைகளையும் தஸ்தகீரின் பெற்றோர் வாங்கி வைத்து கொண்டனராம். அந்த நகையிலிருந்து 5 பவுன் மதிப்பிலான தங்க வளையலை தஸ்தகீரின் சகோதரி எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இதை அப்சா பார்த்துவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடும் தாக்குதல்
அதற்கு தஸ்தகீரின் பெற்றோர் அப்சாவை கடுமையாக தாக்கி தலையில் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. கணவர் வீட்டாரின் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்ததால் அப்சா 5 முறை தற்கொலைக்கு முயன்று பின்னர் உயிர் பிழைத்திருக்கிறார். இந்த நிலையில் அப்சாவுக்கு இரு மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது.
ஆண் குழந்தை
தங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்றும் அதனல் இந்த பெண் குழந்தையை கொன்று விடு என்றும் அப்சாவை, தஸ்தகீரின் வீட்டார் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் அப்சா அதற்கு மறுத்ததால் அவரை வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர். இதையடுத்து தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்ற அப்சா, அங்கு தனக்கு நேர்ந்த கொடுமைகளை வீடியோவில் பதிவிட்டார்.
எலி பேஸ்ட்
பின்னர் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு உயிருக்கு போராடினார். அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்சாவின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார், அவரது செல்போன் வீடியோ பதிவையும் தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர். அந்நத கடிதத்தில் அப்சா கூறியிருப்பதாவது: இந்த உலகம் எவ்வளவு மாறிவிட்டது. இருந்தாலும் பெண் குழந்தைகளை ஏன் வெறுக்கிறார்கள்.
பெண் குழந்தை
பெண் குழந்தையை பெற்றெடுப்பது என்பது என் தவறா. எனது குழந்தையை கொலை செய்ய என்னை வற்புறுத்தியதால் எனக்கு வேறு வழி தெரியமல் நான் இந்த முடிவை எடுக்கிறேன், காதலித்து என் கணவரை திருமணம் செய்த பாவத்துக்கு எனக்கு இதுதான் தண்டனை. மேலும் எனது 50 சவரன் நகைகள், சீர் வரிசை பொருட்கள், திருமணத்திற்கு முன்பு கணவர் வீட்டாருக்கு நான் செய்த ரூ 5 லட்சம் உள்ளிட்டவற்றை ஒன்றுவிடாமல் பெற்று விடுங்கள்.
எதிர்காலம்
அது எனது குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவும். இதுவே பெண் பிள்ளையை பெற்ற தாயின் போராட்டம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அப்சாவி் மாமனார், மாமியார், கணவர், நாத்தனர், கொழுந்தன் என 7 பேர் மீது வரதட்சிணை கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.