எம்.எல்.ஏ-க்களுக்கு கடிதம்; அதிமுக-வுக்கு செக்… ஸ்டாலின் கோரிக்கையின் பின்னணி!

தி.மு.க ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்கிற புதிய திட்டத்தை, கடந்த மே மாதம் அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்தத் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நீண்ட காலமாக கோரிக்கை வடிவில் மட்டுமே இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுமெனவும் முதல்வர் அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில்தான், அனைத்து சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-க்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் கவனம் செலுத்தப்பட வேண்டிய முதல் 10 அத்தியாவசிய பணிகளைப் பட்டியலிட்டு, மாவட்ட ஆட்சியர்களிடம் அந்தப் பட்டியலைச் சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலினின் கடிதம்

முதல்வரின் இந்தக் கடிதம் குறித்து, தி.மு.க-வைச் சேர்ந்த சீனியர் தலைவர்களிடம் பேசினோம். “ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகளைப் பட்டியலிடச் சொல்லியிருக்கிறார் முதல்வர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், ஜி.கே.மணி என அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் கடிதப்படி, வரும் 15 நாள்களுக்குள் தங்கள் தொகுதியிலுள்ள பிரச்னைகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியர்களிடம் எம்.எல்.ஏ-க்கள் சமர்ப்பிக்கலாம். இதன்மூலமாக, ‘கடந்த பத்தாண்டுகள் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோதும், எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை. தொகுதிலுள்ள அத்தியாவசியப் பிரச்னைகள் கூட சரி செய்யப்படவில்லை’ என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். இது அரசியல்ரீதியாக அ.தி.மு.க-வுக்கு பெரும் பாதகம்.

முதல்வரின் கடிதத்திற்கு அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் பதிலளிக்கப் போவதில்லை. மாவட்ட ஆட்சியர்களிடம் அவர்கள் பட்டியலைச் சமர்ப்பிக்காதபட்சத்தில், ‘உங்கள் தொகுதியிலுள்ள பிரச்னைகளைக் களைவதற்கு தி.மு.க அரசு தயாராகத்தான் உள்ளது. ஆனால், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆர்வம் காட்டவில்லை’ என்கிற குற்றச்சாட்டை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். ஒருவேளை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பட்டியலை சமர்ப்பித்தால், அதை ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் கெட்டியாகப் பிடித்துக் கொள்வார். கடந்த மே 18-ம் தேதி, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ரவீந்திரநாத், தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தக் கோரியும், காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பக் கோரியும் கோரிக்கை மனு அளித்தார். தேனி எம்.பி-யாக அவர் முன்வைத்த கோரிக்கையை அரசியல்ரீதியாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மடை மாற்றினர்.

ஓ.பி.ரவீந்திரநாத், ஸ்டாலின்

‘முதல்வர் ஸ்டாலினை அவர் ஏன் சந்தித்தார். அ.தி.மு.க கொள்கைகளுக்கு விரோதமாக தி.மு.க-வை ரவீந்திரநாத் ஆதரிக்கிறார்’ என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. சமீபத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில்கூட, தி.மு.க-வுடன் பன்னீர்செல்வம் கூட்டு வைத்திருப்பதாகத்தான் குற்றச்சாட்டை எழுப்பினார். இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்திற்காக அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பட்டியலைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், தவிடு பொடியாகிவிடும். ‘நானும் என் தொகுதி வளர்ச்சிக்காகத்தானே ஸ்டாலினைச் சந்தித்தேன். என் மீது மட்டும் ஏன் விமர்சனம் வைத்தீர்கள்’ என ரவீந்திரநாத் கேள்வி எழுப்பினால், எடப்பாடியால் பதில் சொல்ல முடியாது. ஆக, ஒரே ஒரு கடிதம் மூலமாக மொத்த அ.தி.மு.க-வுக்கும் ‘செக்’ வைத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்” என்றனர் விரிவாக.

எடப்பாடி பழனிச்சாமி

‘முதல்வரின் கடிதத்திற்கு பதில் அளிப்பதா, மெளனத்தைக் கடைப்பிடிப்பதா…’, என்கிற விவாதம் அ.தி.மு.க-வில் தொடங்கியிருக்கிறது. முதற்கட்டமாக, ‘கடந்த ஓராண்டில் முளைத்திருக்கும் பிரச்னைகளை மட்டும் பட்டியல் எடுங்கள். லாட்டரி சீட்டு விற்பனை, நிலத்தகராறு, காவாய் உடைப்பு போன்றவற்றைப் பட்டியலிடுங்கள். ஆட்சியரிடம் சமர்ப்பிப்பதைப் பற்றி பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம்’ என்று எடப்பாடி தரப்பிலிருந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கிறதாம். முதல்வர் வைத்திருக்கும் இந்த ‘செக்’க்கை அ.தி.மு.க எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது இன்னும் 15 நாள்களில் தெரிந்துவிடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.