நடிகர் விக்ரம், கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், முன்னணி நடிகர்கள் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வருகிற 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையொட்டி படக்குழுவினர் திருச்சி மற்றும் மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரசிகர்களையும் கல்லூரி மாணவர்களையும் சந்தித்து உரையாடி வருகின்றனர்.
அந்த வகையில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பட குழுவினர் திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரிக்கு நேற்று(ஆக.23) வந்தனர். கல்லூரிக்கு வந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், “இந்த படத்தின் பெரிய பலம் இயக்குநர் அஜய் தான். அவர் எடுத்த படங்களில் இது வித்தியாசமானதாக இருக்கும். அவர் ஏற்கனவே எடுத்த இரு படங்களை விட கோப்ரா திரைப்படம் “அதுக்கும் மேல இருக்கும்” என அவர் பாணியில் கூறினார். கோப்ரா படம் விஞ்ஞானம், திரில்லர், குடும்ப கதை உள்ளிட்ட பலவற்றின் கலவையாக இருக்கும். இந்த படத்தின் நாயகி ஸ்ரீநிதி அந்நியன் பார்த்து விட்டு என்னுடன் நடிக்க வேண்டும் என சிறு வயதில் ஆசைப்பட்டுள்ளதாக என்னிடம் கூறினார் என்றார்.
அடுத்த பட அப்டேட் கொடுத்த விக்ரம்
தொடர்ந்து மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்த விக்ரம், “சினிமா என்றாலே எனக்கு பைத்தியம். எனவே தான் இதில் கடுமையாக உழைக்கிறேன். ரசிகர்கள் எங்களை சூழ்ந்து போட்டோ, ஆட்டோகிராஃப் வாங்க வருவது எங்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவு கிடையாது.
இன்னும் சொல்ல போனால் இதற்காக தான் ஏங்குகிறோம். இது கடவுள் கொடுத்த வரம். நான் நடித்த எல்லாப் படமும் எனக்கு பிடிக்கும். ஆனால் இப்பொழுது என் மண்டைக்குள் கோப்ரா மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறது. நாங்கள் பல தோல்விகளை சந்தித்து விட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம்.
ரசிகர்களுக்கு அட்வைஸ்
ஆனால் இந்த தலைமுறை தோல்வியை ஏற்க முடியாததாக மாறிவிட்டது. நாம் கல்வி உள்ளிட்ட எதையும் பிரஷராக எடுத்து கொள்ள கூடாது. விழுந்தால் கூட எழுந்து ஓட வேண்டும். சேதுவிற்கு பிறகு நம்ப முடியாத அங்கீகாரம் எனக்கு கிடைத்தது. அடுத்து இயக்குநர் ரஞ்சித்துடன் இணைந்து படம் நடிக்க உள்ளோம். அது முடிந்த பின்பு மீண்டும் அஜய் இயக்கத்தில் மற்றொரு படம் நடிக்க உள்ளேன்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் நாம் பெருமைப்படும் வகையில் இருக்கும். அந்த படத்தில் நானும் இருப்பது எனக்கு மகிழ்ச்சி” என்றார். மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விக்ரம் கோப்ரா படத்திலிருந்து பாடல் ஒன்றையும், அந்நியன் பட வசனத்தையும் பேசி அசத்தினார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் விக்ரமை காண குவிந்த ரசிகர்கள் மீது சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் தடியடி நடத்தி விரட்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil