வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக்கொண்டிருக்கும் ‘வாரிசு‘ படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், சில விஷயங்கள் படக்குழுவினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சில இணையதளங்களில் வெளியாகி வருவது தொடர்கதையாக ஒன்றாக இருந்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது அங்கிருந்து ஒரு காட்சி வெளியானது, அதில் விஜய் மற்றும் குஷ்பூ ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தின் பாதுகாப்பினை பலப்படுத்தினர். அதன்பின்னர் விசாகப்பட்டினத்தில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது, அங்கிருந்தும் ஒரு காட்சி வெளியாகி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த காட்சியில் உயிருக்கு போராடும் சரத்குமாரை விஜய் மருத்துவமனையில் அனுமதிப்பது போன்றும், அங்கு மருத்துவராக பிரபு இருப்பது போன்றும் உள்ள காட்சி இணையத்தில் மர்ம நபரால் வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் இயக்குனர் வம்சி பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்திற்குள் வரும் யாரும் மொபைல் போன்களை எடுத்துவர கூடாது என்று கட்டளையிட்டு பாதுகாப்பை பலப்படுத்தினார். இந்நிலையில் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி மற்றொரு காட்சி இணையத்தில் கசிந்துள்ளது, அதில் விஜய் மற்றும் ராஷ்மிகா சிவப்பு நிறத்தில் உடையணிந்துகொண்டு ரொமான்ஸாக போஸ் கொடுப்பது போன்று உள்ளது. இது பாடல் காட்சியாக இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது, தற்போது வெளியாகியுள்ள இந்த காட்சியை பார்த்த வாரிசு படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
தில் ராஜுவின் சிறி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நேஷ்னல் க்ரஷ் என்று புகழாரம் சூட்டப்படும் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், ஜெயசுதா, சங்கீதா, யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா மற்றும் சம்யுக்தா போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்க இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.