தெற்கு ரயில்வேயில் 2021-22-ம் நிதியாண்டில் 78.5 சதவீதம் டிக்கெட் முன்பதிவு இணைதளம் மூலமாக நடைபெற்றுள்ளது புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. இந்த முன்பதிவு அடுத்த சில ஆண்டுகளில் 90 சதவீதத்தை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. இதன் எல்லையாக தமிழகம், கேரளம், புதுச்சேரி முழுமையாகவும், ஆந்திரா, கர்நாடகாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றில் படிப்பறிவு அதிகம் உள்ள மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 79 சதவீதம் பேர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இணையத்தைப் பயன்படுத்துவது அண்மையில் வெளியான ஒரு புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.
அதாவது அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி, தெற்குரயில்வேயில் 2018-ம் ஆண்டு டிக்கெட் கவுன்ட்டர்களில் எடுக்கப்பட்ட காகித டிக்கெட்களின் சதவீதம் 26 முதல் 28 சதவீதமாக ஆக இருந்தது. இது 2019-20-ம்நிதியாண்டில், 22.8 சதவீதமாகவும், 2021-22-ம் நிதியாண்டில் 21.5 சதவீதமாகவும் குறைந்தது.
அடுத்தசில ஆண்டுகளில் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு 90 சதவீதத்தை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு அதிகரிப்புக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட் உறுதி செய்வதற்கான நம்பகத்தன்மை, பயணிகளுக்கு ஏற்ற அம்சங்கள் இருப்பது, எளிதாக முன்பதிவு செய்யும் வசதி, இ-டிக்கெட் பதிவு செய்து காகிதத்தை (பிரின்ட் அவுட்) எடுத்துச்செல்வதில் தளர்வு ஆகியவை முக்கியக் காரணம்.
இதுதவிர, கரோனா காலத்துக்கு பிறகு, ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டருக்கு வந்து டிக்கெட் எடுப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது மற்றொரு காரணம். சென்னை கோட்ட ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் நைனா மாசிலாமணி கூறியதாவது: சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட முக்கிய இடங்களில் கடந்த சில ஆண்டுகளாக முன்பதிவு கவுன்ட்டர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
இதனால், பலர் இணையவழியில் டிக்கெட் முன்பதிவுக்கு மாறினர்.மேலும், இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செயல்முறைஉண்மையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மூலமாக, வேகமாகடிக்கெட் முன்பதிவு செய்ய முடிகிறது. மேலும், உறுதி செய்யப்பட்ட டிக்கெட்களைப் பெறுவதற்கு இது அதிக வாய்ப்புகளை வழங்குகிறது என்றார்.
வேலை இழக்கும் அபாயம்
இதுகுறித்து தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறியதாவது: இணையவழியில் டிக்கெட் முன்பதிவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இணையவழியில் டிக்கெட் முன்பதிவு 74 சதவீதமாக இருந்தது. இது, இப்போது 80 சதவீதத்தை அடைந்துள்ளது. இணையவழி மூலமாக டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பதால், டிக்கெட் கவுன்ட்டர்களில் புதிய ஆட்கள் நியமனம் இருக்காது.
தெற்கு ரயில்வேயில் 1.3 லட்சம் ஊழியர்களில் 24 ஆயிரம் ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், வணிகப்பிரிவில் சுமார் 2 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. கிராமப்புறத்தில் உள்ள சிறிய ரயில் நிலையங்களில் பணியாற்றும் வணிகப்பிரிவு பணியாளர்களை பெரிய ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு பணியாற்ற வந்துவிட்டனர்.
சிறிய ரயில் நிலைய டிக்கெட்கவுன்ட்டர்களில் தனியார் ஒப்பந்தப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். இணையதளத்தில் மூலமாக டிக்கெட் முன்பதிவு 90 சதவீதத்தை எட்டிவிட்டால், கவுன்ட்டர்களில் பணியாற்றும் ஊழியர்கள் மேலும் குறைக்கப்பட்டு, மற்றப் பிரிவுக்கு அனுப்பப்படுவார்கள். மேலும், வணிகப்பிரிவு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
ஊழியர்கள் பற்றாக்குறை குறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர்கூறியதாவது: முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுன்ட்டர்களில் தேவைக்கு ஏற்பஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் மூன்றாம் தரப்பினருக்கு ஒப்பந்த அடிப்படையில் டிக்கெட் முன்பதிவு செய்யகொடுக்கிறோம். இணையதளத்தில் முன்பதிவு செய்வது பயணிகளுக்கு வசதியாக இருக்கிறது என்றார்.