பில்கிஸ் பானோ வழக்கில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 11 பேருக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
கோத்ரா கலவரத்தின் போது, ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரின் குடும்பத்தார் ஏழு பேரைக் கொலை செய்த வழக்கில், 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தண்டனைக் காலம் முடியும் முன்பே, குஜராத் அரசால் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு பலரும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்நிலையில் அவர்களின் விடுதலைக்குப் பின் ஒரு வாரத்திலேயே, அந்த 11 பேருக்கு எதிராக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்து விசாரித்த நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான், இவர்களுக்கு விடுதலை வழங்கப்பட்டதா என சட்ட ஆலோசகரிடம் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு, அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த நிவாரண விதிகளைப் பயன்படுத்தலாம் என நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு, குஜராத் அரசுக்கு அனுமதி அளித்ததாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இந்த மனு விரைவில் உரிய அமர்வின் முன்பு பட்டியலிடப்படும் என இந்திய தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் 11 பேருக்கு எதிராக தொடரப்பட்ட இந்தப் பொதுநல வழக்கை விசாரிக்கவும், உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.