டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். அவருக்கு உடல்நிலை அவ்வப்போது சரியில்லாமல் போவதால் கட்சி பணிகளில் தீவிரம் காட்ட முடியவில்லை. இதனால், கட்சியை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் இறங்கி உள்ளது.
இந்த சூழல்நிலையில், செப்.20ம் தேதிக்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ‘காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதித் தேதிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறியிருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 28-ம் தேதி சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட செயற்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக ஆலோசனை நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்படும் தேதிகளுக்கு ஒப்புதல் அளிக்க செயற்குழு கூட்டம் கூடுகிறது.