கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் முத்த பருவ நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பருவத்தில் கடந்த பருவத்தை விட மகசூல் அதிகளவில் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பருவ நெல் சாகுபடி பணிகள் சுமார் 15,000 ஏக்கர் பரப்பில் நடைபெற்றுள்ளது. பறக்கை, புத்தளம், தெங்கம்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்த ஆண்டு குறிப்பிட்ட நேரத்தில் அணைகள் திறந்து பாசனத்திற்கு முறையாக தண்ணீர் கிடைத்ததை அடுத்து அதிக மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிரிடப்படும் டி.பி.எஸ்.நெல் ரகத்தில் போதிய மகசூல் கிடைக்காததால் மாவட்டத்திற்கு ஏற்றவாறு புதிய நெல் ரகத்தை வேளாண் அதிகாரிகள் கண்டு பிடிக்கவேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், மாவட்டத்தில் அரசு கொள்முதல் செய்யும் விலையில் வெளிச்சந்தையிலும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதால் விவசயிகளுக்கு அது மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, ஒவ்வொரு பருவத்திலும் விவசாயிகள் இழப்பை தான் சந்தித்து வருவார்கள். ஆனால், இந்த பருவத்தில் நெல் விவசாயம் லாபகரமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.