“துரோக எண்ணம் கொண்டவர்கள் நல்ல விஷயத்துக்கு ஒத்துவர மாட்டார்கள்” – டி.டி.வி. தினகரன் காட்டம்

“அதிமுக-வில் இருந்து பிரிந்தவர்கள் இணைந்து அனைவரும் இணக்கமாக செயல்பட்டால் தான், தீய சக்தியான தி.மு.கவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற முடியும் என்ற நோக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் சில துரோகிகள், துரோக சிந்தனை கொண்டவர்கள் திருந்தினால் மட்டுமே அவர்களின் எண்ணங்கள் நிறைவேறும்” என தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் டிடிவி. தினகரன்

தஞ்சாவூரில் அ.ம.மு.க கொடி ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “சசிகலா, நான் உட்பட பிரிந்து சென்றவர்கள் இணைந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கூறியதை ஏற்கனவே நான் வரவேற்றுள்ளேன்.

அதே சமயம் சில மேதாவிகள், சுவாசமே துரோகமாக கொண்டவர்கள், நல்ல விஷயங்களுக்கு ஒத்து வர மாட்டார்கள். அனைவரும் இணக்கமாக செயல்பட்டால் தான், தீய சக்தியான திமுகவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற முடியும் என்ற உயரிய நோக்கத்தில் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன்.

பன்னீர் – எடப்பாடி

அதே நேரத்தில் சில துரோகிகள், துரோக சிந்தனை கொண்டவர்கள் திருந்தினால் மட்டுமே இவர்களின் எண்ணங்கள் நிறைவேறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திய போதும், என்னை வெளியேற்றிய பிறகும் அவர்களுடன் வைத்திலிங்கம் இருந்துள்ளார். அதனால் அங்கு நடந்த விஷயங்கள் அனைத்தும் அவருக்கு தெரியும். அதனால் எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம் குறித்து நேரம் வரும்போது கூறுகிறேன் என வைத்திலிங்கம் கூறியிருக்கிறார். அதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் ஒரு அணிலை போல் செயல்படும்.

சமூக நலத் திட்டங்கள் மக்களுக்கு நல்லது, அதே நேரத்தில் ஆட்சிக்கு வருவதற்காக, மக்களை ஏமாற்றும் விதமாக பல்வேறு இலவச திட்டங்களை அறிவிக்கிறார்கள் என உச்ச நீதிமன்றம் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன்.

தினகரன்

தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி அதனால் ஏற்பட்ட பெரிய எதிர்பார்ப்பில் மக்கள் தி.மு.க.வை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். ஆனால் மக்களை ஏமாற்றும் விதமாக, தி.மு.க செயல்படுகிறது. அதற்கான பலனை தி.மு.க நாடாளுமன்ற தேர்தலில் அனுவிப்பார்கள்.

`ஜெயலலிதா இருந்த போதே சசிகலாவை அமைச்சராக்க நினைத்தார், அதனை சசிகலா மறுத்து விட்டார்’ என்ற தகவல் குறித்து கேட்கிறீர்கள். என்னை பத்து ஆண்டுகள் அம்மா கட்சியை விட்டு விலக்கி வைத்திருந்ததால் எனக்கு எதுவும் தெரியாது.

அ.ம.மு.க.வுக்கும் எனக்கும் அரசியல் ரீதியாக யாருடனும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. பழனிசாமியை பொறுத்தவரையில் அவருடைய குணாதிசயங்களை தான் கண்டிக்கிறேன். தனிப்பட்ட விரோதம் கிடையாது. மக்களின் நலம்தான் எங்களுக்கு முக்கியம். 2023 இறுதியில் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்வோம். அ.தி.மு.க-வில் பிரிந்தவர்கள் இணையட்டும். அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பிறகு ஒற்றைத் தலைமை குறித்து பேசலாம்.

தினகரன்

அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர் தொடங்கும் போது இருந்த சட்ட திட்டங்களின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு தான் சரியானது என்பதால் அந்த தீர்ப்பே உச்ச நீதிமன்றம் வரை தொடரும் என என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன். எடப்பாடி பழனிசாமி திருந்த வேண்டும். யார் எந்த தவறு செய்தாலும் மன்னித்து விடலாம். ஆனால் செய் நன்றியை மறந்து நம்பிக்கை துரோகம் செய்வது என்பது அருவருக்கத்தக்க குணாதிசயம். அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு. இறைவனே தடுக்க நினைத்தாலும் அதற்கான தண்டனை கிடைக்கும். வருங்கால அரசியலில் அதற்கு மக்கள் சரியான தீர்ப்பளிப்பார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.