புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் உள்ள மாமுண்டி கருப்பர் கோயிலில் 22 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் மாமுண்டி கருப்பர் கோயில் உள்ளது. இந்த கோயில் அந்த பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாக உள்ளது. இந்த கோயிலில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது. இதனையடுத்து இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி கடந்த சில ஆண்டுகளாக ரூ.1 கோடி மதிப்பில் இந்த கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்த நிலையில் கடந்த 18 தேதி முதல் கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டது. அதில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மகாகணபதி ஹோமம் ஆகிய யாகசாலை பூஜை தொடங்கியது.
அதனையடுத்து, கடந்த 22 தேதி முதல் காலை யாகசாலை பூஜையானது நடைபெற்றது. அதன் பிறகு இன்று 4ஆம் யாகசாலை பூஜை காலை 5 மணிக்கு நடைபெற்ற நிலையில் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட நீரை தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் கருடன் அந்த கோயிலை வட்டமிட புனித நீரை கோயில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிறகு, அந்த புனித நீரை பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதை முன்னிட்டு வடவாளம் மட்டுமல்லாமல் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கனக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றதால் அந்த பகுதியே திருவிழா கோலம் கொண்டுள்ளது.