ஆண், பெண் இந்த இரண்டு பாலினத்தைத் தாண்டி விவரிக்க முடியாத பாலினத்தைக் கொண்டவர்களும் இச்சமூகத்தின் அங்கமே. ஆனால் இவர்களின் பாலினத்தாலேயே, இவர்கள் எதிர்கொள்ளும் அவலங்களும் அநேகம். அதன் தொடக்கம் வார்த்தைகளில் இருந்துதான் ஆரம்பமாகிறது. கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தி இச்சமூகத்தினரை அழைக்கும் அவலம் இன்றளவும் தொடர்கிறது. இதற்கு காரணம் LGBTQIA+ சமூகத்தினரை குறித்த புரிந்துணர்வும், அவர்களை எப்படி அழைக்கவேண்டும் என்ற சொல்லாடலும் சமூகத்தில் பரவலாக இல்லை.
இந்நிலையில், பெண் பாலீஈர்ப்புடைய (lesbian) தம்பதியினர் காவல்துறையின் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகக் கூறி தாக்கல் செய்த மனுவின் விசாரணையில், இந்தச் சொற்கள் குறித்த ஆலோசனையானது முன்வைக்கப்பட்டது. `LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்த மக்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் அழைக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பரிந்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22-ம் தேதி திங்கள்கிழமை, இந்த மனுவின் விசாரணையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், LGBTQIA+ சமூகத்தினருக்கான சொற்களஞ்சிய அரசாணை நகலை சமர்ப்பித்தார்.
இந்த அரசின் ஆணையில் வெளியிடப்பட்டுள்ள சொற்களஞ்சியத்தையே, ஊடகங்களிலும் மன்றங்களிலும் LGBTQIA+ சமூகத்தினரை குறிக்க கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
அரசு வெளியிட்ட LGBTQIA+ சமூகத்தினருக்கான சொல்லகராதி:
* sex – பால் பகுப்பு
*sex characteristics – பாலின பண்புகள்
*Intersex – இடைப்பால் \ஊடுபால்
*Gender – பாலினம்
*Gender Identity – பாலின அடையாளம்
*Gender Expression – பாலின வெளிப்பாடு
*Gender non – conforming person – பாலின அடையாளங்களுடன் ஒத்துப்போகாதவர்
* Transgender person – மருவிய பாலினம் \மாறிய பாலினம்
* Transgender woman – திருநங்கை
* Transgender man – திருநம்பி
*Gender non-binary person – பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவர்
*Gender dysphoria -பாலின மன உளைச்சல்
*Gender incongruence – பாலின முரண்பாடு
*Gender affirmation procedures – பாலின உறுதிப்பாட்டு நடைமுறைகள்
*Gender Affirmation Surgery – பாலின உறுதிப்பாட்டு அறுவை சிகிச்சை
*Deadname – பிறப்பு வழி பெயர்
*Gender fluid person – நிலையற்ற பாலின அடையாளம்
*Cisgender – மிகை பாலினம்
*Sexuality – பாலியல்பு
*Sexual Orientation – பாலீர்ப்பு
*Hetero-sexuality \Hetero-sexual – எதிர்பாலின ஈர்ப்பு
*Homosexual \Homosexual – தன் பாலின ஈர்ப்பு
*Bisexuality\ Bisexual – இருபாலீர்ப்பு
*Pansexuality – அனைத்து பாலீஈர்ப்பு அல்லது பல பாலின ஈர்ப்பு
*Asexual – அல்பாலீரப்பு
*Romantic orientation – காதலுணர்தல்
*Queer – பால் புதுமையர்
*LGBTQIA+ – ஒருபாலீர்ப்பு கொண்டவர்கள், இருபாலீர்ப்பு கொண்டவர்கள், *மாற்றுப் பாலினத்தவர், ஊடுபால், பால்புதுமையர், அல்பாலீர்ப்பு
*Ally – தோழமை
*Queer pride parade – பால்புதுமையர் சுயமரியாதை பேரணி
*Rainbow pride parade – வானவில் சுயமரியாதை பேரணி
*Conversion Therapy – மாற்றுதல் என்ற பெயரிலான போலி மருத்துவம்.
மனிதராகப் பிறந்த யாவரும் சுதந்திரமாக வாழவும், கண்ணியத்துடன் நடத்தப்படவும் வேண்டும். பாலினத்தைக் காரணம் காட்டி பிரிவினை ஏற்படுத்துவது தவறு.