பொதுவாக கருந்துளை அல்லது கருங்குழி என்று அழைக்கப்படும் கருப்பு துளைகள் விண்வெளி முழுவதும் நிறைந்துள்ளன. இவை ஒட்டுமொத்த சூரியகுடும்பத்தையே கூட விழுங்கும் அளவுக்கு அளவில் பெரிதாகவும் இருக்கும். அதன் ஈர்ப்பு விசை விண்வெளியில் உள்ள யாவற்றையும் உள்ளிழுத்து கொள்ளும் சக்தி கொண்டது.
ஒரு சுழல்காற்றை எடுத்துக்காட்டாக வைத்து கொள்ளுங்கள்.எப்படி சுழல்காற்று அதன் அருகில் வரும் எல்லாவற்றையும் உள்ளிழுத்து கொள்ளுமோ அது போல கருந்துளையும் பல மடங்கு சக்தியோடு உள்ளிழுக்கும் தன்மை கொண்டது.
இவற்றை அதன் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு அதன் அருகில் சுற்றி வரும் விண்மீன் கூட்டங்களை கொண்டு ஆய்வாளர்கள் அடையாளம் கண்டு கொள்வர். இதன் மீதான ஆய்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில் கடந்த மே மாதம் நாசா விஞ்ஞானிகள் கருந்துளை ஒன்றிலிருந்து கிடைத்த சத்தம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
நாசா வெளியிட்ட Blackhole ஆடியோ ட்வீட்:
பூமியிலிருந்து 60 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் Messier 87இல் உள்ள கருந்துளை ஒன்றின் ஆடியோ தரவுகளை வெளியிட்டுள்ளது நாசா. நாசாவின் சந்திரா X-ray ஆய்வகத்தின் டெலஸ்கோப் கருந்துளையை சுற்றியுள்ள பெர்சியஸ் குழுமத்தின் இடையே இருந்து இந்த தரவுகளை பெற்று அனுப்பியுள்ளது. அது அனுப்பியது மனித காதுகளுக்கு புலப்படாத சப்தம் என்பதால் அதன் உண்மையான அதிர்வெண்ணிலிருந்து 144 குவாட்ரில்லியன் மற்றும் 288 குவாட்ரில்லியன் அதிர்வெண் அளவுக்கு உயர்த்தி மனிதர்கள் கேட்கும் அளவு உயர்த்தி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த சப்தம் ஏதோ பேய் படங்களில் வரும் பேய்கள் எழுப்பும் சத்தம் போல் உள்ளதால் பலரும் அது குறித்து பலவிதமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக பல சமூக பிரபலங்களே இது பேய்களின் சத்தம் போல இருப்பதாகவும், ஏலியன்களை கூட்டமாக யாரோ கொடுமை படுத்துவது போல் சத்தம் வருவதாகவும், படங்களில் வரும் சத்தம் போல் இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடீயோவை பதிவிட்டுள்ள நாசா பொதுவாக விண்வெளியில் வளிமண்டலம் இல்லாத காரணத்தால் ஒலியால் பயணிக்க முடியாது என்றும் கருந்துளையை சுற்றி வரும் கேலக்ஸி குழுமத்தில் நிறைந்திருக்கும் வாயுக்களில் இருந்து வந்த சத்தத்திலிருந்துதான் இந்த உண்மையான ஒலி கிடைத்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளனர்.
-சுபாஷ் சந்திரபோஸ்