நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பேரூராட்சி சார்பில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா மற்றும் 2 தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்ற தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் ஆண்டு பெருவிழா மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது. ஆனால் இந்தாண்டு பக்தர்கள் பங்கேற்புடன் வழக்கம் போல் மிகவும் சிறப்புடன் விழா நடைபெற உள்ளது.
இதனால் வேளாங்கண்ணியில் 10 லட்சத்திற்கு அதிகமான பேர் வருகை தருவருவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து விழா முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
பேராலய நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறை நிர்வாகங்கள் தங்களது பணிகளை தொடங்கியுள்ளது. பேராலயம் சார்பில் பேராலயத்தில் மின்விளக்குகள் அமைத்தல், பேராலய வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு தேவையான பந்தல்கள் அமைத்தல், பேராலயத்தை சுற்றி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துதல் என பல்வேறு பணிகளை செய்து வருகிறது. வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி கூறியதாவது: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா காலங்களில் அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள். கடந்த இரண்டு ஆண்டு காலம் பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு வழக்கம் போல் பக்தர்கள் கலந்து கொள்ளும் வகையில் கோலாகலமாக ஆண்டு பெருவிழா நடைபெறும். பேராலயம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
பேரூராட்சி சார்பில் விழா காலங்களில் பக்தர்கள் அதிகம் கூடுவதால் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். முக்கியமாக நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் குளோரின் பவுடர் கலந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. தேவையான அளவு பீனாயில் சேகரித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாதாரண நாளில் வேளாங்கண்ணி பேரூராட்சியில் 8 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பெரு விழா நடைபெறும் 10 நாட்களில் கூடுதலாக 4 லட்சம் லிட்டர் என 12 லட்சம் குடிநீர் நாள் ஒன்று விநியோகம் செய்யப்படவுள்ளது.
மேலும் 10 இடங்களில் குடிநீர் தொட்டிகளும், 24 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மிஷின்களும் அமைக்கப்பட உள்ளது. வேளாங்கண்ணியின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் 2 தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது. பக்தர்கள் வசதிக்காக இங்கு 24 மணி நேரமும் குளியலறையுடன் கூடிய தற்காலிக கழிவறை மற்றும் நகரும் கழிவறைகள் அமைக்கப்பட உள்ளது. ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை வைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் நியமித்து குப்பைகளை அகற்றப்படும்.
தூய்மை பணியில் நாள்தோறும் சுழற்சி முறையில் 200 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே 32 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு செயல்படுகிறது. இதை தவிர பேராலயம், காவல்துறை சார்பில் கூடுதலாக சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும். எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி பெருவிழாவில் கலந்துகொள்ளலாம் என்றார்.