புதுச்சேரி: “ஜிப்மரில் புதுச்சேரி மக்களுக்கான சிகிச்சை சரியாக இல்லை என்பதே உண்மை” என்று சட்டபேரவையில் அம்மாநில முதல்வர் ரங்கசாமி விமர்சித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு: நாஜிம்(திமுக): “ஜிப்மர் நிறுவனத்தோடு சுகாதாரத் துறை போட்டுக்கொண்ட ஒப்பந்த அடிப்படையில் காரைக்கால் பொது மருத்துவமனை சீரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.30 கோடி செலவிடப்பட்டதா?”
முதல்வர் ரங்கசாமி: “காரைக்கால் அரசு மருத்துவமனை சீரமைப்பு பணி கரோனா பாதிப்பில் நிறுத்தப்பட்டது. அதன்பின் எந்தப் பணியும் நடக்கவில்லை. செலவு கணக்குகளை ஜிப்மர் நிர்வாகம் மேற்கொள்ளாததால் இதுவரை செய்த பணிக்கான செலவு, மீதமுள்ள தொகை பற்றிய விவரம் ஜிப்மர் நிர்வாகத்திடம் மட்டுமே உள்ளது. அரசு மருத்துவமனையை புனரமைப்பதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்டித் தரும்படி கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஒப்பந்தத்தில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. புதிய கட்டடம் தரைத்தளத்துடன் 3 மாடிகள் 10 ஆயிரம் சதுர அடியில் கட்ட முன்மொழிவு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கட்டுமானப்பணி தொடங்கும்.”
நாஜிம்: “ஜிப்மருடன் போட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துங்கள். பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளால் துாண்கள் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.”
ரங்கசாமி: “மத்திய சுகாதாரத் துறையில் நிதி கேட்டுள்ளோம். ரூ.20 கோடி வரை நிதி தருவதாக கூறியுள்ளனர். காரைக்கால் அரசு மருத்துவமனை புதிதாக கட்ட இடம் தேர்வு செய்துள்ளோம். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும். கடந்த ஆட்சியில் இதை விரைவு படுத்தாமல் விட்டுவிட்டனர்.”
நேரு (சுயே): “புதுவையில் உள்ள ஜிப்மர் அந்நிய தேசத்தில் உள்ளதுபோல உள்ளது. பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்குக்கூட சிகிச்சை கிடைக்கிறது. ஆனால். புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை. இங்கு மக்கள் தொடர்பு அதிகாரியை நியமித்து புதுவையை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
ரங்கசாமி: “சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை புறந்தள்ளக்கூடாது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது அரசு, டாக்டர்களின் கடமை. ஜிப்மரில் புதுச்சேரி மக்களுக்கான சிகிச்சை சரியாக இல்லை என்பதே உண்மை. இதை, தொடர்ந்து ஜிப்மர் நிர்வாகத்திடம் பேசி குறைகளை சரி செய்ய சொல்கிறோம்.”
அதைத் தொடர்ந்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டை தொடர்பாக திமுக எம்எல்ஏ நாஜிம் விமர்சித்து பேசியதால் பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் பதிலளித்து பேசியதால் பேரவையில் கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவ்வார்த்தை அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
ரங்கசாமி: “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதில் உள்ள குளறுபடிகள் அனைத்தையும் களைவோம்.”