இந்தியாவில் டோல் கேட்டுகளை அகற்ற திட்டம்: ஆனால் இப்படி ஒரு ட்விஸ்ட்!

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, வாகனங்களில் பொருத்தப்படும் தானியங்கி நம்பர் பிளேட்கள் மூலம் பணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கான சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகள் இல்லையென்றால் எப்படி? நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களில் இருந்து எப்படி பணம் வசூலிக்கப்படும்? ஃபாஸ்டேக்குகளுக்கு என்ன நடக்கும்? நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பின்வருமாறு;

ஏன் சுங்கச்சாவடியில் கட்டணம் கட்ட வேண்டும்?

இந்தியாவில் ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவுச்சாலைகளை அமைப்பதற்கும், அதனை பராமரிப்பதற்கும் ஆகும் செலவுக்கான கட்டணம் வரியாக அச்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் சுங்கச்சாவடி கட்டணம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒருவகையான வரி. நெடுஞ்சாலை அமைப்பதற்கான செலவை மீட்டெடுத்தவுடன், சாலையை பராமரிக்கும் நோக்கத்திற்காக அக்கட்டணம் 40 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.

சுங்கக்கட்டணத்தை யார் வசூலிப்பார்கள்?

நெடுஞ்சாலையோ அல்லது விரைவுச்சாலையோ கட்டப்பட்டதும், சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதற்கான கட்டணங்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன. சுங்கச்சாவடிகளின் நிர்வாகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது சுங்கச்சாவடிகளில்
ஃபாஸ்டேக்
(FASTag) முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்னணு கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளது. ஆன்லைனில் ஃபாஸ்டேக் கணக்குகளில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். சுங்கச்சாவடிகளில் தானியங்கி முறையில் ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புதிய திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும்?

நெடுஞ்சாலைகளில் இருந்து சுங்கச்சாவடிகளை அகற்றும் திட்டத்தை 2019ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு சுட்டிக்காட்டியது. உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் (HSRP) மூலம் ஒரு வாகனத்தின் அனைத்து தகவல்களையும் அறிய முடியும். “புதிய திட்டத்தின்மூலம், சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு, கேமிராக்கள் மூலம் இந்த நம்பர் பிளேட்டுகளை படம் பிடித்து நேரடியாக கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இந்த திட்டத்தை சோதனை முயற்சியாக செயல்படுத்தி வருகிறோம்.” என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள தடைகள் என்ன?

சுங்கக்கட்டணம் செலுத்தாமல் தவிர்க்கும் பட்சத்தில், அபராதம் விதிக்க இந்திய சட்டங்களின் கீழ் எந்த பிரிவும் கிடையாது. “உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் இல்லாத கார்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் அத்தகைய நம்பர் பிளேட்டுகளை பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கான மசோதாவை கொண்டு வர வேண்டும்.” என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

திட்டத்தின் நன்மைகள் என்ன?

சுங்கச்சாவடிகளில் செலுத்தும் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். ‘தற்போது, 60 கிமீ தொலைவில் உள்ள சுங்கச்சாவடிகளில் கூட முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டியுள்ளது. புதிய திட்டத்தின்மூலம், 30 கிமீ தூரம் மட்டுமே நெடுஞ்சாலையைப் பயன்படுத்தினால், புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதி விலை வசூலிக்கப்படும்.’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.

வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், மாசம் குறையும், நேரமும் மிச்சமாகும். புதிய தொழில்நுட்பத்தின் மூலம், ஓட்டுநர்களின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாகப் பணம் வசூலிக்கப்படும்.

புதிய நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் என்ன செய்வது?

நிதின் கட்கரியின் கூற்றுப்படி, பழைய வாகனங்களுக்கும் கூட, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் (HSRP) பொருத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

ஃபாஸ்டேகுகளுக்கு என்ன ஆகும்? டோல் கேட்டுகள் எப்போது அகற்றப்படும்?

இதுபற்றி எந்த தெளிவும் இல்லை. மக்களவையில் நிதின் கட்கரி அளித்த பதிலின்படி, மொத்த சுங்க வசூலான ரூ.40,000 கோடியில் 97 சதவீதம் ஃபாஸ்டேக் மூலம் நடக்கிறது. மீதமுள்ள 3 சதவீதம் பேர், ஃபாஸ்டேக் பயன்படுத்தாத காரணத்தால், டோல் கேட்டுகளில் சாதாரண கட்டண விகிதங்களை விட அதிக பணத்தை ரொக்கமாகச் செலுத்துகிறார்கள்.

அரசாங்க தரவுகளின்படி, ஒரு வாகனம் ஒரு சுங்கச்சாவடியைக் கடக்க 47 வினாடிகள் ஆகிறது. டோல் கேட்டுகளில் ஃபாஸ்டேக் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 260 க்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்டணம் வசூலிக்க முடியும். அதுவே ரொக்கமாக என்றால், 112 வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடியும்.

அதேபோல், சுங்கச்சாவடிகள் எப்போது அகற்றப்படும் என்பது பற்றியும் எந்த உறுதியான தகவலும் இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.