சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் தனித்துவமான எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பால சாகித்ய புரஸ்கார் யுவ புரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான சாகித்ய விருதுகள் தலைநகர் டெல்லியில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு மலையாளம்,இந்தி போன்ற பல மொழிகளில் வெளியாகியுள்ள கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவற்றிற்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழில் சிறுகதைக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு வழங்கப்படவுள்ளது. அவரது ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக இவ்விருது வழங்கப்படவிருக்கிறது.
மீனாட்சியைப் பொறுத்தவரை 27 ஆண்டுகள் பத்திரிக்கை துறையில் இருந்திருக்கிறார். பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் தலைவிகளின் பங்கு பற்றி எழுதிய தொடர் கட்டுரைகளுக்காக தில்லியில் உள்ள `தி ஹங்கர் புராஜெக்ட்’ அமைப்பு வழங்கிய `சரோஜினி நாயுடு’ விருதை 2009-ல் பெற்றிருக்கிறார். இதுமட்டுமின்றி இசைக் கலைஞர்கள் பற்றி எழுதிய கட்டுரைகளுக்காக சென்னையைச் சேர்ந்த விபன்ச்சி அமைப்பின் தங்க மெடலையும் இவர் பெற்றிருக்கிறார். `கிராமத்து ராட்டினம், `பூ மலரும் காலம், `நினைவுகள் நிறைந்த வெற்றிடம்’ போன்ற சிறுகதை தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். அதே போல் எழுத்தாளர் ப. காளிமுத்துவிற்கு சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதைக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது. வருகின்ற நவம்பர் 14ம் தேதி டெல்யில் விழா நடத்தபட்டு அவர்களுக்கு விருது வழங்குவதோடு மட்டுமின்றி 50,000 பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.