சாலையோரம் வீசப்படும் பச்சிளம் குழந்தைகள் – உண்மையில் இதன் உளவியல் பிரச்சனைகள்தான் என்ன ?

நல்லதாங்காள் கதையில் இருந்து தொடங்குவோம். கடும் வறுமை, பசி, பட்டினி காரணமாக தான் பெற்ற 7 குழந்தைகளையும் பாழங்கிணற்றில் தூக்கிப்போட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிறாள் நல்லதாங்காள். இன்றும் பல கிராமங்களில் நல்லதாங்காள் கதை பேசப்பட்டு வருகிறது. சில கிராமங்களில் அவர் நாட்டார் வழிபாட்டுத் தெய்வமாகவும் இருந்து வருகிறாள். 

இந்தக் கதையை நவீன யுவகத்தில் நின்றுகொண்டு கேட்பவர்கள், அத்தனைக் குழந்தைகளையும் கொல்ல நல்லதாங்காளுக்கு உரிமை உண்டா ? என்று கேட்கிறார்கள். இன்றும் கணவனைத் தாண்டிய காதலனுக்காக, பணத்திற்காக, சமூகத்தின் வசைச் சொற்களுக்காக எத்தனையோ குழந்தைகள் நல்லதாங்காள்களால் கொல்லப்படுகின்றன. 

பச்சிளம் குழந்தைகள் சாலைகளில் வீசப்படுகின்றன. பெற்றுவிட்டோம் என்பதற்காகவே எந்த இடத்தில் அந்த குழந்தைகளின் வாழ்க்கையை இவர்கள் முடிவு செய்கிறார்கள் என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும், தாயின் தற்கொலைக்குப் பிறகு இந்தச் சமூகத்தில் குழந்தைகளின் நிலை என்னவாகும் என்று துயரத்தின் உச்சமே இந்த முடிவுக்கு அவர்கள் செல்கிறார்கள் என்ற வாதம் மறுபுறம் இருக்கிறது. 

பசி, பட்டினி, வறுமைக்காக மட்டுமே குழந்தைகள் கொல்லப்படுவதில்லை. திருமணத்தை மீறிய காதலுக்காகவும் பல குழந்தைகள் கொல்லப்படுகின்றன. இதற்கெல்லாம் பல உளவியல் சிக்கல்களை மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் தரப்புக்கு சில கருத்துக்களைக் கூறினாலும், சமூகத்தில் பெண்களுக்கான அழுத்தங்களும், பெண்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறைகளுமே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் என சமூக செயற்பாட்டாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர். ஆண் – பெண் உறவில் பெரும்பாலான புரிதல் இல்லாமல் பெரும் சிக்கலில் இந்தியச் சமூகம் தவித்து வருவதாகவும் ஓர் கருத்தை அவர்கள் முன்வைக்கின்றனர். 

குழந்தைகளைக் கொலை செய்வது ஒருபக்கம் என்றால், பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளங் குழந்தைகளை சாலையோரத்தில் வீசிச் செல்லும் அவலம் மற்றொரு பக்கம் நடந்துகொண்டே இருக்கிறது. இந்தச் சமூகம் அங்கீகரிக்காத காதல்களில் அல்லது காமம் சார்ந்த விபத்துகளில் வீழும் ஆண் – பெண் உறவில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். 

சாலையோரத்தில் வீசப்படும் பச்சிளங்குழந்தைகள் மீதான பரிதாபத்தைவிட,  அதை வீசிச்சென்ற தாயின் மீது இரண்டு மடங்கு கோபத்தை இந்தச் சமூகம் ஏற்றிவைக்கிறது. ஆனால், அதற்கு காரணமான ஆணுக்கு இதில் எத்தனைப் பங்குண்டு ; அவனுக்கு என்னவிதமான தண்டனை முறை இச்சமூகத்தில் உண்டு என்பதெல்லாம் கூடுதல் சிக்கல்கள். எந்த உறவாக இருந்தாலும், ஆணுறை அவசியம் என்ற விழிப்புணர்வு இன்னும் கடைக்கோடி கிராமங்கள் வரை செல்லவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. 

நகரப் பகுதிகளில் ‘ஃப்ளேவர்’ வகை வரை ஆணுறைகளைக் கேட்டு வாங்கும் செக்ஸ் குறித்த அடிப்படை புரிதல், கடைக்கோடி கிராமங்களில் இன்னும் போய்சேரவில்லை என்பதை யார் மீது குற்றம்சுமத்துவது ? செக்ஸ் தொடர்பாகவே இன்னும் பலருக்கு கல்வி அவசியம் என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது. 

இதைப் பேசிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில்கூட கடலூரில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள புல்லூர் கிராமத்தில் இன்று அதிகாலை சாலையோரம் உள்ள முட்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனைக் கேட்ட அவ்வழியே வந்தவர்கள் முட்புதரை விளக்கிப் பார்த்தபோது, தொப்புள்கொடியுடன் குழந்தை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.  

இன்னும் அந்தக் குழந்தையின் தொப்புள்கொடிகூட அறுபடாமல் சாலையோரம் கிடந்துள்ளது அந்தக் குழந்தை. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். குழந்தையை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பெற்றோர்களே….உங்களை மட்டுமே நம்பி இந்த உலகத்திற்கு வரும் ஒன்றுமறியா குழந்தைகளை கொன்றுபோடுவதற்கும், சாலையில் வீசிச் செல்வதற்கும் எந்த சமூக காரணத்தைச் சொன்னாலும் சரி, நிச்சயம் அது தவறான முடிவுதான். கடும் போராட்டமான வாழ்க்கையை நம்பிக்கையுடன் வாழ்ந்த பல மனிதர்கள் உங்களுக்கு முன்னே இருந்திருக்கிறார்கள் ; இனியும் இருப்பார்கள். ஒருவேளை அது நீங்களாகவும் இருக்கலாம்.!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.