நம்பிக்கை வாக்கெடுப்பு: முதல்வர் நிதிஷ் குமார் அரசு வெற்றி!

பீகார் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், பழைய கூட்டணி கட்சியான, லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து, மீண்டும், ஆட்சி அமைத்துள்ளார்.

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக, கடந்த 10 ஆம் தேதி, நிதிஷ் குமார் பதவி ஏற்ற நிலையில், துணை முதலமைச்சராக, தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, பீகார் மாநில அமைச்சரவை பதவி ஏற்றது. இதில், நிதிஷ் குமார் தரப்பில், 11 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்ற நிலையில், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில், 16 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். மேலும், காங்கிரஸ் கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை, பீகார் மாநில சட்டப்பேரவையில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா ராஜினாமா செய்த நிலையில், துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். அதில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசு வெற்றி பெற்றதாக அவர் அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக, பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு, முதலமைச்சர் நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் பேசியதாவது:

பீகார் மாநில சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர். என்னை எதிர்த்து பேசினால் தான் உங்கள் கட்சியில் பதவி கிடைக்கும். பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து செயல்பட உறுதிமொழி எடுத்துள்ளோம். இந்த முடிவுக்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். 2024 மக்களவைத் தேர்தலில் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மத்திய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் வீடுகளில் தான், அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை சோதனை நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.

முன்னதாக, பாட்னாவில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மூத்தத் தலைவர்கள் வீடுகளில், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையே, வரும் 26 ஆம் தேதி பீகார் மாநில சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என, துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரி தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.