ஹைதராபாத் : முஸ்லிம் மதம் பற்றி அவதுாறாக பேசியதாக தெலுங்கானா மாநில பா.ஜ., – எம்.எல்.ஏ., ராஜா சிங் நேற்று கைது செய்யப்பட்டார். கட்சியில் இருந்தும் அவர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு பா.ஜ., – எம்.எல்.ஏ.,வான ராஜா சிங், சமீபத்தில் வெளியிட்ட ‘வீடியோ’ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கண்டனம்
காமெடி நிகழ்ச்சி நடத்தும் முனவர் பரூக்கி என்பவர், சமீபத்தில் ஹைதராபாதில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர், கடவுள் ராமர், சீதை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி, அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராஜா சிங், வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர், முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பல்வேறு கட்சியினரும், ராஜா சிங்கிற்கு கண்டனம் தெரிவித்தனர். தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் ராஜா சிங்கை கண்டித்து போராட்டமும் நடந்தது.மாநிலம் முழுதும் போலீஸ் ஸ்டேஷன்களில் ராஜா சிங்கிற்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று, ராஜா சிங்கை போலீசார், அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், அவர் பா.ஜ.,விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து ராஜா சிங் கூறியதாவது:நான் வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எதற்காக நீக்கப்பட்டது என தெரியவில்லை. இந்த வழக்கிலிருந்து வெளியில் வந்ததும் இரண்டாவது வீடியோவை வெளியிடுவேன்.
போராடுவேன்
கடவுள்கள் ராமர், சீதை பற்றி அவதுாறாக பேசிய முனவர் பரூக்கியை ஏன் கைது செய்யவில்லை. போலீசாரிடம் கை கூப்பி வேண்டுகிறேன். தயவு செய்து இதுபோன்ற செயல்களை அனுமதிக்க வேண்டாம்; தர்மத்துக்காக தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, பா.ஜ.,வினரை தெலுங்கானா மாநில போலீசார் கைது செய்வதை கண்டித்து, மாநில பா.ஜ., தலைவர் சஞ்சய் பந்தி, நேற்று ஹைதராபாதில் போராட்டம் நடத்தினார்.
அவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறுகையில், ”வரும் தேர்தல்களில் சந்திரசேகர ராவையும், அவரது கட்சியையும் தோற்கடிப்போம். ஜனநாயக ரீதியில் போராடிய பா.ஜ., மாநில தலைவர் சஞ்சயை கைது செய்ததை கண்டிக்கிறோம்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement