தொழில்நுட்ப யுகத்தில் அறிவாற்றலை மேம்படுத்தும் நோக்கில் “Memory in a Digital Age” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 23 – 25 வரை சர்வதேச கருத்தரங்கம் மெட்ராஸ் ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் நடந்து வருகிறது. ஆன்லைனில் நடைபெற்றுவரும் இந்தக் கலந்தாய்வில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போலாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகளிலிருந்து 160 பேச்சாளர்கள் பங்கேற்று வருகிறார்கள்.
நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அவருடன் சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தின் இயக்குநரான டாக்டர் காமகோடி, டாக்டர் அவிஷேக் பரூய், டாக்டர் மெரின் சிமி ராஜ், மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறைத் தலைவரான டாக்டர் ஜோதிர்மய திரிபாதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கத்தின் முதல் நிகழ்வாக ‘மெமரி பைட்’ என்ற பெயரில் ஒரு செயலியை வெளியிட்டனர். கடந்த 500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஆங்கிலோ இந்தியச் சமூகத்தின் வரலாற்றை, கலாச்சார பண்பாடுகளை விவரிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் தற்போது நேரில், ஆன்லைனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தக் கருத்தரங்கில் பல வரைபடங்கள், இயங்குப் படங்கள் உட்படப் பல காணொலிகள் காண்பிக்கப்படுகின்றன.
இதுகுறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “இப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்ப கல்லூரி, மனிதவியலில் ஆய்வுகள் மேற்கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நிறுவனம் இன்னும் பல வரலாற்றாய்வு செய்து பல பண்பாட்டுக் கூறுகளை வெளிக்கொணர வேண்டும்” என்று தெரிவித்தார்.
அடுத்த பேசிய சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தின் இயக்குநரான காமகோடி, “தற்போது உள்ள தொழில்நுட்ப யுகத்தில் அறிவு என்பது அத்தியாவசியமான ஒன்று. அந்த அறிவை எப்படி எங்கெல்லாம் சேமித்து வைக்கிறோம் என்பதுதான் சவாலான ஒன்று. தரவுகள் அதிகரிக்க அதிகரிக்க, அதைச் சேமித்து வைப்பதற்கான சவால்களும் அதிகமாகின்றன. அதற்கான தீர்வாகத்தான் இந்தக் கருத்தரங்கு அமைந்துள்ளது. மேலும் இந்தக் கருத்தரங்கில் மெய் நிகர் காணொலி மூலம் வரலாற்றை விளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்வரும் காலங்களில் இதற்கான முதலீட்டை நிச்சயமாகச் செய்வோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய மனிதவியல் துறைத் தலைவரான டாக்டர் மெரின் சிமி ராஜ், “இது இந்தத் துறையில் நடக்கும் இரண்டாம் கருத்தரங்கம். இதற்கு முன்னர் 2019-ல் ஜாலியன் வாலா படுகொலை நினைவு நாள் அன்று முதல் கருத்தரங்கம் நடந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள மெமரி பைட் செயலியில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கிலோ இந்தியர்களின் வரலாறு காணொலி வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது க்ரோனோடைப் மற்றும் மாமல்லபுரம் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தார்.