செல்போனில் அமைச்சருடன் இன்ஸ்பெக்டர் வாக்குவாதம்; இடமாற்றம் செய்து உத்தரவு.! கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: தனது தொகுதிக்கு உட்பட்ட ஒரு பெண்ணின் குடும்பத் தகராறு தொடர்பான புகாரில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி போன் செய்த கேரள உணவுத்துறை அமைச்சர் அனிலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். கேரள உணவுத்துறை அமைச்சராக இருப்பவர் அனில். கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுமங்காடு தொகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண், தன்னையும், தனது குழந்தையையும் 2வது கணவர் துன்புறுத்துவதாக கூறி திருவனந்தபுரம் வட்டப்பாறை போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று அமைச்சர் அனில், வட்டப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டரான கிரிலாலுக்கு போன் செய்து இளம்பெண்ணின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். நியாயமாக என்ன செய்ய முடியுமோ? அதை கண்டிப்பாக தான் செய்வதாக இன்ஸ்பெக்டர் கிரிலால் அமைச்சரிடம் கூறினார். அதைக் கேட்டு கோபமடைந்த அமைச்சர் அனில், தன்னையும், தனது மகனையும் துன்புறுத்துவதாக இளம்பெண் புகார் கொடுத்து உள்ளார். உடனடியாக அவரது 2வது கணவரை தூக்கிக்கொண்டு ஸ்டேஷனுக்கு வர வேண்டாமா என்று கேட்டார்.

ஆனால் அப்படியெல்லாம் தூக்கிக் கொண்டு வர முடியாது, ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதன்பின் என்னைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள் என்று இன்ஸ்பெக்டர் கிரிலால் பதிலுக்கு கூறினார். இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் பேசும் ஆடியோ சமூக இணையதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் கிரிலால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அமைச்சர் அனில் முதல்வர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து அவர் உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.