கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மதாத்தனூர் கிராமத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 2015 ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்பு, துவக்கப்பள்ளி அதே இடத்திலும் உயர்நிலைப்பள்ளி கிராமத்திற்கு அருகே குறிப்பிட்ட தொலைவில் ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அமைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் இபிஎஸ் அவர்களால் இந்த பள்ளி திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் பள்ளிகள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளியில் அணுசோனை, ஜெக்கேரி, ஒன்னுகுறிக்கி, இருதாளம், காலேப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த 300 ஏழை எளிய மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கூடம் கட்டியபோது சமையல் செய்வதற்கென தனித்தனியாக சமையற் கூடம் கட்டாததால், பள்ளிக்கு பின்புறமாக கழிவறைக்கு என பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிட உட்பகுதியை மாற்றியமைத்து இட நெறுக்கடியில் முன்புறமாக ஷீட் அமைத்தும் செப்டிக் கழிவுநீர் தொட்டி அருகிலேயே மாணவர்களுக்கு சமையல் செய்யும் அவலநிலை தொடர்கிறது.