உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே கல்குவாரி மற்றும் கிரஷர்களின் தொடர் இயக்கத்தால், அங்கு சாலைகளில் மண் புழுதி பறந்து வருகிறது. இதனால் அங்கு விபத்துகள் அதிகரித்து வருகின்றன. உத்திரமேரூர் அருகே மதூர் மலைப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அரசு அனுமதியுடன் தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்கியது.
இதை தொடர்ந்து, சுற்று வட்டார பகுதிகளான குண்ணவாக்கம், சித்தாலப்பாக்கம், சிறுமயிலுார், ஆனம்பாக்கம், சிறுதாமூர், அருங்குன்றம், பட்டா, பழவேரி, பினாயூர், பொற்பந்தல், பேரணக்காவூர் உள்பட பல்வேறு கிராமங்களில் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இரவுபகலாக செயல்படுவதால், அருங்குன்றம், பழவேரி, பினாயூர், திருமுக்கூடல் மேம்பாலம் வழியாக நாள்தோறும் பல்வேறு இடங்களுக்கு கருங்கல் ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு நூற்றுக்கணக்கான லாரிகள் சென்று வருகின்றன. இதனால் மேற்கண்ட கிராமப் பகுதி சாலைகளில் எந்நேரமும் மண் புழுதி பறக்கிறது. மேலும், அப்பகுதிகளில் வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.