தெலுங்கானா: தெலங்கானாவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி, கைது செய்யப்பட்ட பாஜக சட்டபேரவை உறுப்பினர் ராஜாசிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐதராபாத்தில் போராட்டங்கள் வெடித்ததால் பதற்றம் நிலவுகிறது. பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து பேசிய பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து ராஜ்சிங்கை கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்த டபிர்புரா போலீசார் நம்மம்பள்ளி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
பின்னர் ராஜ்சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் மீண்டும் போராட்டங்கள் வெடித்தது. ஐதராபாத்தில் 100-கணக்கானோர் ஊர்வலமாக சென்று, சார்மினார் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். சஞ்ஜில்கூடா காவல்நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் அவரது உருவபொம்மையை எரித்தனர். வாகனங்களை அவர் மறித்ததால், பல இடங்களில் போக்குவரத்து முடங்கியது. ஏராளமான இளைஞர்கள் பேரணியாக சென்று டபிர்புரா காவல்நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல்துறையினரின் சமாதான பேச்சை அடுத்து அவர்கள் களைந்து சென்றனர். நள்ளிரவில் நடைபெற்ற போராட்டங்களால் ஐதராபாத்தில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.