மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்ற 2020 ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிறைவேற்றியுள்ளார்.
1,25,000 டாலருக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் வரையிலான கல்விக் கடனை ரத்து செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
மேலும், மாத வருமானத்தில் 10 சதவீதம் கல்விக் கடனுக்காக பிடித்தம் செய்யப்படுவதை இனி 5 சதவீதமாக குறைத்துள்ளார். தனி நபர் வருமானம் 1,25,000 டாலரும் குடும்ப வருமானமாக 2,50,000 டாலரும் பெறுபவர்களுக்கு இந்த சலுகை அனைத்தும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
தவிர, 10 ஆண்டுகள் கல்வி கடனை செலுத்தியவர்களுக்கு நிலுவை தொகையில் 12,000 டாலர் வரை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார், இதுவரை 20 ஆண்டுகள் கட்டி முடித்தவர்களுக்கே இந்த சலுகை வழங்கப்பட்டது.
குறைந்த வருமானம் உள்ள படிப்புதவித் தொகை மாணவர்களுக்கு கூடுதலாக 10,000 டாலர்கள் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கல்வி கடனுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் ஆகஸ்ட் 31 முடிவடைய உள்ள நிலையில் இதனை நவம்பர் மாதம் வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவு இளம் வாக்காளர்களை குறிப்பாக கருப்பின மற்றும் ஹிஸ்பானிக் எனப்படும் தென் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க மாணவர்களை கவரும் விதமாக உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கல்விக்கான சலுகைகள் இலவசமா அல்லது உரிமையா என்பது உலகளவில் பஞ்சாயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் பேசுபொருளாகி இருக்கிறது.