உலகின் முன்னணி டெக் நிறுவனமாக இருக்கும் ‘Meta’ நிறுவனத்தின் சமூக வலைதள சேவை ஃபேஸ்புக். 2004-ல் மார்க் சக்கர்பெர்க் மற்றும் அவரது நண்பர்களால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது உலகளவில் சுமார் 2.8 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. அந்த வகையில் இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஃபேஸ்புக் செயலியில் பாதுகாப்பு தொடர்பான நிறையக் குறைபாடுகள் இருப்பதாகவும், டேட்டாக்கள் ஹேக் செய்யப்படுவதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்துவருகின்றன.
இந்நிலையில் இன்று, பலருக்கும் டைம்லைனில் சம்பந்தமில்லாத நபர்களின் பதிவுகள் வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக, டெய்லர் ஸ்விஃப்ட், நிக்கி மினாஜ், ஹாரி ஸ்டைல்ஸ், எமினெம், ஜோ ரோகன் போன்ற முக்கியமான பிரபலங்களின் பக்கங்களில் சம்பந்தமில்லாத நபர்கள் பதிவிட்ட பதிவுகள் பலருக்கும் காட்டப்பட்டிருக்கின்றன.
இதனால் பாதிக்கப்பட்ட பலரும் இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இதுதான் சரியான வாய்ப்பு எனப் பிரபலங்களின் பக்கங்களில் மீம்ஸ், வீடியோக்கள் எனப் பதிவிட்டுவருகின்றனர். தொடர்ந்து இப்படி ஏதேனும் பிரச்னை வந்துகொண்டே இருப்பதால் கடுப்பான நெட்டிசன்கள் ஃபேஸ்புக்கையும் அதன் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான மார்க் சக்கர்பெர்க்கையும் கேலி செய்து “இது போன்ற குறைபாடுகளை விரைவில் சரி செய்ய வேண்டும். இப்படி அஜாக்கிரதையாக இருக்கும் உங்களிடம் எங்கள் தகவல்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்?” என்றும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இதற்கு ‘Configuration’ மாற்றத்தில் ஏற்பட்ட பிழையே காரணம் என ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக் மீது இதுபோன்ற புகார்கள் எழுவது இது முதல்முறை அல்ல. பலமுறை அதன் டேட்டா பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
எதாவது பண்ணுங்க மார்க்!