புதுடெல்லி: டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான அரசை கவிழ்க்க, இக்கட்சியின் 4 எம்எல்ஏ.க்களுக்கு தலா ரூ.20 கோடி தருவதாக பாஜ பேரம் பேசியதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் எம்பி, டெல்லியில் நேற்று அளித்த பேட்டி வருமாறு: எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பாரதி, குல்தீப் ஆகியோரை பாஜ தலைவர்கள் அணுகி, தலா ரூ.20 கோடி தருவதாகவும், பாஜவுக்கு வந்து விடும்படியும் பேரம் பேசியுள்ளனர். இதை ஏற்று பாஜ.வில் சேராவிட்டால் பொய் வழக்குகளை சந்திக்க நேரிடும், மணீஷ் சிஷோடியா சந்திப்பதுபோல் அமலாக்கப் பிரிவு, சிபிஐ வழக்குகளையும், சோதனைகளையும் சந்திக்க நேரிடும் என மிரட்டி உள்ளனர். கெஜ்ரிவால் அரசை கவிழ்க்கும் முயற்சியில் பிரதமர் மோடி பல்வேறு யுத்திகளை மேற்கொண்டு வருகிறார், ஆம் ஆத்மி கட்சியை உடைக்க முயற்சி எடுக்கிறார். சிபிஐ, அமலாக்கப் பிரிவுகளைப் பயன்படுத்தி, ஆம் ஆத்மி அரசை கவிழிக்கவும் மோடி முயல்கிறார். எங்கள் எம்எல்ஏ.க்களுக்கு பணம் கொடுத்து ஆசை வார்த்தை கூறியும், அவ்வாறு ஒத்துழைக்காதவர்களை மிரட்டியும் வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* லைசென்ஸ் பெற கமிஷன்
பாஜ செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறுகையில், ‘ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்த நபர்களின் பெயர்களை அவர்கள் சொல்ல மறுப்பது ஏன்? டெல்லியில் மதுபான விற்பனைக்கான உரிமம், ஆம் ஆத்மிக்கு பெரும் தொகையை கமிஷனாக கொடுத்த நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டு உள்ளது. இதில், முக்கியமான குற்றவாளி கெஜ்ரிவால்தான். ஆனால், விசாரணையில் சிக்காமல் தப்புவதற்காக, எந்த ஆவணத்திலும் அவர் கையெழுத்திடவில்லை,’ என தெரிவித்தார்.